அங்காடித்தெரு - ஒரு எதிர்வினை

திரு வசந்த பாலன் sir,


அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் அறிந்த காலத்தில் இருந்து அதன் மீதான ஈர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. ('வெயில்' தலைப்பும் அப்படித்தான்).
ஒரு மிக முக்கியமான பிரச்சனையை கையிலெடுத்துள்ளீர்கள்.


படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது


1)படத்திற்கு தேவையான தகவல்கள் சேகரித்தது.
2)ஒரு பல்பொருள் (மிகப்பெரிய) அங்காடியின் அனைத்து அங்குளங்களையும் பதிவுசெய்தது
3)ரங்கநாதன் தெருவின் வெவ்வேறான வாழ்கையை பதிவு செய்தது.
4)இந்த கதை கருவை பிடிவாதமாக எடுத்த உங்கள் தைரியம் மற்றும் மனோபலம்
5)அஞ்சலியின் நடிப்பு. (விருது வழங்கப்பட வேண்டும்)


படத்தை பார்த்து வந்து ஒரு அயர்வு/தூக்கமின்மை என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. அதற்கு காரணத்தையே இங்கே தருகிறேன்.


ஒரு சமூகப்பிரச்சனையை திரைப்படமாக அனுகும் போது மிகவும் கவனம் தேவை. காரணம் அது இங்கு இன்று வாழும் மக்களை அவர் தம் வாழ்வை நேரடியாக காட்சிப்படுத்தி அடையாளப்படுத்துகிறது. ஒரு செய்தித்தாள் நிருபரை விட பல மடங்கு பொறுப்புணர்வு ஒரு கலைஞனுக்கு தேவைப்படுகிறது.


ரங்கநாதன் தெருவிலோ குறிப்பிட்ட பல்பொருள் அங்காடியிலோ சுயதொழில் செய்யும் மற்றும் வேலைசெய்யும் மனிதர்கள் அதிகாரமேதுமற்ற ஏதிலிகள். அவர்களுடைய பிரச்சனை குறித்து பேச முற்பட்டிருக்கும் தாங்கள் இந்த படத்தின் சமூக எதிர்வினை(reaction in society after seeing the film) குறித்து யோசித்திருக்கலாம் என்பது என் ஆதங்கம்.


நாளை ஒரு அங்காடிக்குள் நுழையும் மக்கள் அங்கு வேலைபார்க்கும் பெண்கள் மீது வைக்கும் பார்வை எவ்வளவு இரக்கத்தோடும் குரூரமானதாகவும் இருக்கும். என்னை பொறுத்தவரை இப்பொழுது அந்த பெண்கள் அந்தரங்க இடத்தில் உள்ள காயங்களை காட்டுவதற்காக பொதுஇடத்தில் தங்கள் ஆடைகள் அவிழ்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவேபடுகிறது.நான் அந்த காட்சிகளை முழுவதுமாக நீக்கச்சொல்லவில்லை.அதே சமயம் முழுக்க முழுக்க அந்த காட்சிகளை சுற்றியே படம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.


திரைமறைவில் பெண்களை பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய அன்னாச்சிகளின் அதிகாரத்தை விடவும் வெள்ளித்திரையில் அதை கொண்டுவந்து வியாபாரம் ஆக்கியது மிக அதீதமான அதிகாரம் என்றே கருதுகிறேன். அதிகாரம் படைத்த இருவருக்கு இடையை நிகழும் ஒரு போரின் இடையில், சிக்கித்தவிக்கும் சாதாரண மக்களை போல் அந்த அங்காடியில் வேலை செய்யும் அனைத்து பெண்களின் நிலை உள்ளது.


'அங்காடித்தெரு' ஒரு சுதந்திரத்தை அவர்களுக்கு கையளிக்கவில்லை. அது இயலாது.


குறைந்த பட்சம் அவர்களின் வாழ்கையை அவர்களின் மனிதத்தையும் அவர்களுக்கான நியாயத்தை ஒரு அதிகாரத்திற்கு எதிராக முன்வைக்கவும் இல்லை.ஏனென்றால் படத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரும் மனிதர்களாகவே காட்டப்படவில்லை குற்றவாளிகளாக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.பின் அவர்களிடம் என்ன நியாயம் பேசமுடியும் என்ற இயலாமை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


பரிதாபத்திர்குறியதாய் காட்டப்பட்ட அந்த ஏதிலிகளின் வாழ்கை மீது அடுத்த சில தினகளுக்கு ஒரு இரக்கத்தை அங்கு செல்லும் அனைவருக்கும் ஏற்படுத்தும்.அதன் பிறகு எல்லாம் எதார்த்த நிலைக்கு திரும்பும். (அதாவது எதார்த்தம் மாறப்போவதில்லை). நம் வழியில் பார்க்கும் பிச்சைக்கு இடும் ஒரு ரூபாய்க்கும் வழியில் எதிர்கொள்ளும் எளிய மனிதரின் மீது நாம் செலுத்தும் ஒரு புன்னகைக்கும் மிக நீண்ட இடைவெளி உள்ளது.


சமூகப்பொறுப்புணர்வோட திரைப்படம் எடுக்க நினைத்தமைக்கு இப்பொழுதும் தலைவணங்கவே தயாராக இருக்கிறேன்.அடுத்த படத்தில் எளிய மனிதர்களை இன்னும் நெருங்கி பார்க்க முயற்சித்தால் அதில் நிறைய சுவாரசியங்கள் இருக்கும். நம்மால் யூகிக்க முடியாத அளவுக்கு நிறைய எதிர்வினைகள் இருக்கும். வாழ்கையை எதிர்கொள்வதில் எல்லோரும் வெவ்வேறானவர்கள். எல்லோரும் பரிதாபத்தை எதிர்பார்பவர்கள் அல்ல. மூத்திரத்தை வெளியேற்ற அனுமதிக்கபடாத பெண்ணின் பரிதாபம் விடவும் அவளுக்குறிய கோபம் பதிவுசெய்யப்படவேண்டியதாக உருமாறலாம்.


இந்த பதிவு எந்த உள்நோக்கத்தோடும் எழுதப்படவில்லை. எளிய மக்களை நெருங்கி பார்க்கும் ஒரு ஆவணப்புகைப்படக்கலைஞனின் ஆதங்கம் தான் இது.

Read more...

ஆயிரத்தில் ஒருவன் - தற்கால தமிழ் இன அரசியலின் முதல் எதிர்வினை - திரைப்படம்

என்னைப் பொறுத்தவரைக்கும் மிகச் சிறந்த திரைப்படங்கள் இரண்டு வகை .ஒன்று திரை எனும் ஊடகத்தை நன்கு உணர்ந்து உருவாக்கப்படுபவை.மற்றொன்று படம் எடுக்கப்பட்ட மொழி, நாடு மற்றும் மக்களின் வாழ்க்கை முறையைச் சார்ந்த தற்கால கடந்தகால எதிர்கால நிலையின் உண்மையைக் குறித்தான ஒரு விழிப்பை ஏற்படுத்துபவை.(movie of resistance). ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது வகை. அந்த வகையில் தமிழ் சமூகத்தின் மிக முக்கியமான அரசியல் படம் இது என்று கூறலாம்.



படத்தில் என்னைப் பாதித்த விஷயங்கள் - மீண்டும் என்னை பார்க்கத்தூண்டும் விஷயங்கள்



1. தமிழ் மற்றும் இந்து மரபு சார்ந்த விஷயங்கள்:


தமிழ் திரைப்பட வரலாற்றில் நான் அறிந்தவரையில் தமிழ் மற்றும் இந்து மரபுகளை அட்வன்சர்ஸோட(adventures) இணைத்து விடுவது இதுவே முதல் முறையாகும்.இதனாலேயே இது தமிழ்திரை உலகின் ஒரு மைல் கல் என்றும் கூறலாம்.


1.இப்படத்துடைய ஆரம்பத்தில் வருகிற தெருக்கூத்து , கூத்தின் முதல் வரிசையில் உட்கார்ந்து பார்கிற ஒரு சிறுவனின் மனநிலையையும் அவனின் கற்பனையையும் உண்மைக்கதையாக சொல்ல நினைத்தது மிக அழகான தொடக்கம்.


2. நடராஜன் நிழல் - நாம பார்த்ததெல்லாம் கிருஸ்துவ கோட்பாடுகளும் மற்றும் பிரமிட் பற்றியும் மட்டுமே. நம்ம வாழ்க்கையோடு தொடர்புடைய - நாம இதுவரை கடவுள்னு(!) வழிபடும் தெய்வ உருவங்களை இம்மாதிரியான படங்கள்ல பார்க்கிறது ரொம்பவே பிடிச்சிருக்கு


3.ஓவியம் எல்லாக்காட்சிகளிலும் பயன்படுத்தியிருப்பது. கோயில் ஓவியத்தை காட்டி கதை சொல்லப்பட்டு வளர்ந்த நம் சூழலின் பதிவாக இருக்கிறது



2. திரைக்கதை



ஈழப்பிரச்சனையை பின்புலமாக வெச்சி ஒரு கதை உருவாக்கப்படிருக்கு. அதுவும் மிகவும் மனசுக்கு நெருக்கமாகவும் நெஞ்சை தைக்கும் வகையிலும் அது சொல்லப்பட்டிருக்கு.எந்த ஒரு தமிழனுக்கும்(திராவிடனுக்கும்),ஈழம் ங்கிறது கண் இமைக்குள்ள வெளிவர காத்திருக்கிற ஒரு நீர் துளி மாதிரி. இந்த நாட்கள் நம்ம இன வரலாற்றின் துயரமான பக்கங்களை கடந்துட்டிருக்கோம். படத்துடைய கடைசி ஒரு மணிநேரம் மொத்த திரையரங்கும் மௌனமா இருந்ததுன்னா அது தான் மௌன அஞ்சலி ன்னு அர்த்தமே அன்றி ஒன்னும் புரியாம இல்லை.



ஈழப்பிரச்சனை பத்தி படம் எடுக்கிறதோ அதை வெளியிடுறதோ இந்த சூழல்ல அவ்ளோ எளிதில்லை. ஏன்ன கொன்னவனை விட கொலைக்கு ஆயுதம் கொடுத்தவன் ரொம்பவே பயப்படுறான். தன்னுடைய அஹிம்சா முகம் கலைஞ்சிடுமோன்னு.


அதே சமயம் நண்பர் ஆதிஷா - இதெல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததுன்னு சொல்றதையும் என்னால ஏதுக்க முடியல.(ஆதிஷா வின் மொத்தப்பதிவும் பிடிச்சிருந்தது. ஈழம் பற்றிய விமர்சனம் தவிர) http://www.athishaonline.com/2010/01/blog-post_19.html



படத்துல இருக்கிற பல நுனுக்கமான விஷயங்களை நாம கவனிக்க தவறுகிறோமோன்னு தான் தோனுது. கீழ சொல்றதை கொஞ்சம் பாருங்க.



ஈழத்தமிழர்களும் சோழப்பரம்பரை.



புலிக்கொடி



மன்னனின் வார்த்தைக்காகவும் மானம் இழக்கும் பொழுதும் எதிரியிடம் சிக்கும் பொழுதும் தன்னைதானே கழுத்தை அறுத்து சாகும் மக்கள்



படத்துடைய பேர் :ஆயிரத்தில் ஒருவன்.இந்த பெயர் நேரடியாக படத்தில பார்த்தீர்களானால் படத்துல நடிச்ச யாரையும் குறிப்பதாகவே தோன்றாது ( கார்த்தி பெரும்பாலும் அடிவாங்குவே அதிகம்).



அப்புறம் அந்த பழையப்பாடல். அடிமையா இருந்து மீளும் ஒரு இனத்தின் மிக முக்கியமான பாடல்."ஒரே வானிலே ஒரே மன்னிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம். "இதை வெறும் ரீ-மிக்ஸ் சொல்லிட்டு ஒதுக்கிடமுடியாது. அதுமட்டுமில்லாம M.G.R நேரடியா ஈழமக்களின் எல்லா செயல்பாடுகளுக்கும் ரொம்ப உறுதுனையாக இருந்தவர்ங்கிறதும் இங்கே மிக முக்கியம். கார்த்தி M.G.R ரசிகனா காட்டப்பட்டிருப்பது இதுதான் காரணமா இருக்கும். அவன் பின்பாதி கதையில அந்த மக்களோட சேர்ந்து உதவுவது போல படம் நிறைவடைவது இதையே குறிப்பதாக படுகிறது.



படத்தின் முதல் பாதி நிகழ் காலத்தையும் குகைக்குள்ள சோழர்காலத்தையும் பின் குகைக்குள்ளிருந்து வெளியாகுவதில் ஈழக்காலகட்டத்தையும் பதிவுசெய்திருக்கிறது. இதுவே ஒரு புதுமையான முயற்சி தான். இரண்டு காலமும் ரொம்பத்தெளிவாக படத்தில் பின்னப்படிருக்கு ஒரு கடல் கரையில தலைவன் இறப்பது உட்பட.(படம் முழுக்க முழக்க போர் நடந்த காலத்திலேயா படமாகவும்உருவாக்கப்பட்டிருப்பது இனம்பிரித்து அறிய முடியாத உணர்வை தருகிறது. எனக்கு கிடைத்த தகவல் படி படத்தின் இறுதிகாட்சிக்கள் மறு-படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக தெரிகிறது (MAY 19 பிறகு).)



அதுமட்டும் இல்லைங்க அழகம்பெருமாள் - ஷரத்பொன்சேகாவை மிகச்சாதரணமாக நினைவுபடுத்துவதை அவ்ளோ எளிதாக military haircut ல இருக்கிற ஒற்றுமைன்னு மட்டும் சொல்லி ஒதுக்க முடியாது. பாதுகாப்பு அரண்கள் : அமானுஷயங்களா தெரிஞ்சாலும் இதுவும் ஈழ நாட்டின் பாதுகாப்பு அரண்களை நினைவுபடுத்துது.



3.தமிழ் இன கறை நீக்கும் முயற்சி - பார்த்திபன் - ஆன்டிரியா - ரீமா சென்



இதுவும் ஒரு ஆழமான அரசியல் நிரம்பிய காட்சி. மிக நீண்ட காலமாக தமிழன் ஒரு காம வெறியன் (இராவணன்) என்ற ஒரு பொது புத்தி பரப்பிவிடப்பட்டிருக்குது.ரீமா விருப்பத்தோடு வந்தாலும் அவள் யார் என்று அறியத்தலைப்பட்டு விலகுவதும் பின் அவளைப் புணர்வதும் ஆந்திரியா புணர விழைந்தே வந்திருக்கிறாள் என்று நினைத்து தன் ஆடைக்களைவதும் அவள் விருப்பமில்லை என்று அறிந்ததும் அவளை அங்கிருந்து போகச்சொல்வதும், பெண்ணிற்கான விருப்பம் பிராதானப்படுத்தி அரசன் தனக்கே உரித்தான சுய கவுரம் உள்ளவனாக சித்தரித்திருப்பது. பின்பு அந்த இனம் அடிமையாகும் பொழுது (இந்திய) ராணுவ வீரர்கள் பெண்களை ஈவிரக்கமின்றி கற்பழிப்பது.



4. கருப்பு - வெள்ளை அரசியல்



பெரும்பாலான தமிழ் படங்கள்ல hero க்கள் வெள்ளையாக இருப்பார்கள் மற்றும் மீசை இல்லாமல் இருப்பார்கள்.வில்லன் - கண்டிப்பா கருப்பாகத்தான் இருப்பான் . மீசை பெருசாக இருக்கும். தலைமுடி நிறைய வைத்திருப்பான்.




Heroine:பொண்ணு வெள்ளையா இருப்பாள்.அதனால நல்லவள் (உயர்ந்த பண்புகள் உடையவளாகவும்) கருதப்படுகிறாள். கருப்பாக இருப்பவள் மிகக்கேவலம்(அங்கவை - சங்கவை - ஷங்கரின் அசிங்கமான மனம்) .கருப்பினத்தின் (திராவிட – தமிழ்) அழகி கருப்பியாகவே இருக்கவேண்டுமே தவிர வெள்ளையாக இருந்தால் அங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது, வெள்ளைக்கு அடிமையாக கருப்பு இருக்கிறது என்பதே.( உண்மையில் இது மிகச்சாதராண விஷயமல்ல. இது பற்றி தனியே நிறைய எழுத வேண்டும்) தமிழ்நாட்டு பெண்கள் சுத்தமாக நிராகரிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். (மன்னிக்கவேண்டும் த்ரிஷா வை தமிழச்சி என்று சொன்னால் விரக்தியாக சிரிப்பதை தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.).



நம்மக்கள் எந்த வித யோசனையும் இன்றி வில்லனையும் heroவையும் டையாளப்படுத்திக்கொள்வார்கள். அதாவது சொந்த இனத்தை சார்ந்தவன் (அல்லது சொந்த இனத்தின் அடையாளங்கள் கொண்டவன்) வில்லனாகவும் மாற்று இனம் சேர்ந்தவன் - அன்று தெய்வம் இன்று நல்லவன்(hero).



தமிழ்சினிமாவில் முதல் முறையாக ஒரு மக்கள் கூட்டம் மொத்தமும் கருப்பாக இருக்கிறது (வேண்டுமென்றே கரி பூசி நடித்திருப்பதும் என்னை பொறுத்தவரை ஒரு அரசியல் கூறே ). அந்த கூட்டம் நல்ல தமிழ் பேசுவதும் அந்த இனம் தன் சொந்த மண் அபகரிக்கப்பட்டு வாழ்வதும் பின் வெள்ளைதோளுடைய ஒருத்தி வந்து வில்லியாக உருமாறுவதும் அவள் விஷம் கலந்து தமிழின த்தவரை கொலை செய்வதும் பின் சிறு ஆயுதங்களால் அழிக்க முடியாத இனத்தை கனரக ஆயுதங்களை/ ஆயுதப்படை (இந்தியாவிலிருந்து வரவழைத்து) குண்டுகள் வீசி அவர்களை அழித்துவிடுவதும் நம் கண்முன் நிகழ்கால கருப்பு தினங்கள் காட்சிகளாக விரிகிறது.7



இன்னும் இன்னும் என்னை இந்த படம் பாதிச்சதுக்கு மிக முக்கியமான காரணம் ரீமாசென் கதாபாத்திரம் - நல்ல வெள்ளையாக இருக்கும் ஒருத்தியை - பாண்டிய நாட்டுபெண் என்று


அடையாளப்படுத்துவது. அது கண்டிப்பாக பாண்டியா நாட்டுப்பெண்ணை குறிக்கவில்லை என்பதை வேறெப்படியும் செல்வாவால் பதிவு செய்திருக்க முடியாது.


‘நாங்கள் மத்திய அமைச்சர்களாகவும் இருக்கிறோம்’ என்று ரீமா சொல்வதும் மிக மிக நேரடியான அரசியல் எதிர்வினை.



பொதுவாக வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான என் விளக்கம்:



1.LOGIC இல்ல: .வேறுதேசத்தின் திடீரென்று cell பேசுவது.


நீங்க ஆங்கில படங்களில் வரும் சருக்கள்கள் பற்றி ஒரு கேள்வியும் எழுப்புவதில்லை.Bourne ultimatum - நான் பார்த்தலே சுத்தமா பிடிக்காத படங்கள்ல இதுவும் ஒன்னு. அதுல ஒரு


காட்சி வரும் அதாவது அந்த hero யாருக்கும் எதுக்கும் பயப்படமாட்டான்.என்னென்னவோ பண்ணுவான்.ஆனா நாம அதை கேள்வி எழுப்ப மாட்டோம்.ஏன்னா அதுக்கு அவனே சொல்லிடுவான் அவன் பெரிய திறமைசாலின்னு. புரியலையா. ஒரு காட்சியில HERO ஓடுவான். திடீர்னு ஒரு hotel வழிய ஓடும் பொழுது அங்க ஒரு cloth (dining table) எடுத்துட்டு ஓடுவான். ஏன்னு நமக்கு யோசனையா இருக்கும். அப்ப ஒரு கண்ணாடி சில்லுகள் பதிக்கப்பட்ட ஒரு சுவர் வரும்.அவன் கையில இருக்கிற துனியை வெச்சி தாண்டுவான்.


உடனே என் பக்கத்துல உட்கார்ந்து படம் பார்த்துடிருந்த நண்பன் பயங்கரமா கைதட்டினான். தியேட்டரே கைதட்டுச்சி.அதாவது செம LOGIC.இதே காட்சிய தமிழ்படத்துல வெச்சிருந்தா துணியெல்லாம் இல்லாம வெறும் கையிலயே தாண்டிடுவான். இது தாங்க இவுங்க சொல்ற LOGIC சருக்கல்.இதுல ஒரு துளிகூட மனித எதார்த்தம் இல்லை. வெறும் ஒரு பொருள். கலை யில்லை. அடுத்த காட்சியல கண்ணாடி மேல கை வைக்கனும்னு முன்னாடி காட்சியில துணியை எடுத்துட்டு ஓடுறது ஒரு கட்டமைப்பு. இது கலை ஆகா.


இன்னும் புரியலைன்னா.ஆயிரத்தில் ஒருவன் ஒரு english படமா இருந்தா... எங்கிட்ட ஒரு cell phone இருக்கு. ரொம்ப புதிய ரகம். இதுல என்ன விஷயம்னா இது எந்த நாட்டுக்கு போனாலும் எந்த இடத்துக்குப்போனாலும் இது வேலைசெய்யும்னு hero வுடைய நண்பன் சொல்வன் (முதல் பாதியில). hero அதை வாங்கிட்டு வந்திருப்பார். இரண்டாவது பாதியில பயன் படுத்துவார். அப்ப உங்களுக்கெல்லாம் எந்த logic ம் இடிச்சிருக்காது. அட போங்கப்பா.



2. படத்தில் செம்மொழி என்ற பெயரில் சமஸ்கிரத்ததை தவிர்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த தமிழ் புரியவேயில்லை


சோழர் காலத்து தமிழ் தான் இந்த படத்துல பயன்பட்டிருக்கு. முதல்முறையா தமிழ்அறிஞர்களுடைய உதவியோடு அந்த மொழி முழுமைப்பெற்றிருக்கு. அதை கேட்டகும் போது எனக்கு இருந்த ஆனந்ததிற்கு அளவே இல்ல. அது மட்டுமில்லாம இந்த மொழி உருவாக்கத்துக்கு பின்னால இருக்கிற உழைப்பை மிகச்சாதரணமா நிராகரிக்க வார்த்தைகள் ,’ செந்தமிழ் வேணும்னு அகாரதியை தேடி எடுத்திருக்காய்ங்க போல’ ன்னு சொல்வது.http://vandhiyadevan.blogspot.com/ அந்த காலத்துல சமஸ்கிரதம் குறைவா பரவியிருக்கு. இன்னைக்கு தமிழ்ல தமிழை தான் தேடவேண்டியதா இருக்கு. முழுக்க முழுக்க சமஸ்கிரதமும் ஆங்கிலமும் தான். அதுக்கு வருத்தப்பட எந்த தமிழனும் இப்ப இல்லை. தன் பிள்ளைகளுக்கு பேர்வைக்கும் பொழுது தவறாம ஷ,ஹ,ஜ,ஸ இருக்கனும் பார்த்து பார்த்து பேர்வைக்கிறான் ஒவ்வொரு தமிழனும். (கருப்பன், முனியாண்டி, மாயான்டி, சங்கிலி முருகன், குனசாகரன் தமிழவன் நிலவன் etc..) இதெல்லாம் ஊரில் உள்ள படிப்பறிவில்லாத நம் மூதாதையர்களின் பெயர்கள்(!). உலகத்தலயே தன்மொழியில பேர் வெச்சிக்காத வெச்சிக்க விரும்பாத மற்றும் வெச்சிக்க அனுமதிக்கப்படாத ஒரே இனம் தமிழ் (திராவிட) இனம் தான்.



படத்தில் சுத்தமாக பிடிக்காதது



1.Graphics - பணம் போதியிருக்காது. 1000 கோடி ரூபாய் படங்களை பார்க்க தொடங்கிவிட்ட நம் கண்களுக்கு உள்ளூர் 36 கோடி ரூபாய் கடினம் தான்.


இது தான் நமக்கு சாத்தியம். இருந்தாலும் 36 கோடியில் இன்னும் திறமையோடு எடுத்திருக்கலாம் என்று திரை உலகு நண்பர்கள் கூறினார்கள்.


செல்வாவுக்கு graphics சம்பந்தமான அறிவு போதவில்லை என்பதே அடிப்படை காரணம் என்று தெரிகிறது. graphic பெரும்பாலும் தவிர்த்திருக்கலாம்.



2.நிறைய ஆங்கிலப்படங்களின் காட்சிகளை தழுவியது (அ) திருடியது



3.Editing : படம் பலமுறை முடிந்து முடிந்து தொடங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது கருப்புதிரை வந்து போகும் பொழுதெல்லாம்.



முக்கியமாக பாராட்டப்படவேண்டியவர்கள்



1. திரைக்கதை 0 செல்வா


2. தயாரிப்பாளர் (இந்த படத்தை எடுக்க பணமும் தேவை தைரியமும் தேவை)


3.துணை நடிகர்கள்


4.ART குழு


5.வைரமுத்து - பாடல்- வில்லாடிய


6.கார்த்தி (பெருசா image பார்க்காம அடிவாங்குறதும் etc..etc..)


7.ரீமா




Techincal குறைபாட்டை வைத்து ஒரு படத்தை அரைவேக்காடு என்று சொல்வது திரைப்படம் என்ற கலையை பற்றி அடிப்படையான தெளிவுகூட இல்லாமல் இருக்கிறோம் என்றே அர்த்தம். இது Indian Express and ஆனந்த விகடன் மக்களுக்கும் பொருந்தும்.



நன்றி


இராவணன்


Read more...

யன்னல்கள்

அம்புலி படர்ந்த சமையல் பாத்திரங்கள்
மின்விசிறி இணைப்பை இரைச்சல்களை நிறுத்தி மென்தென்றல் உலவும் அமைதியை உடுத்தும் இரவு
பனித்த விடியலில் பல்துலக்கியபடி வானம்
ஆடைகள் களைந்து குளிக்கும் அறையில் பழுத்த இலைகளும் வீதியின் மழையும்

திசையெங்கும் யன்னல்கள் வழி
வெளி நிறையும் வீடு

வாழத்தகுந்த இடமாய் நகரம்

Read more...

அது

அது அப்படித்தான்
இருந்தது

சிந்தாமல்
சிதறாமல்
ஒரு கண்ணாடிக்குடுவையில்
நீர் ஊற்றுவது போல


இப்பொழுதும் கூட
மீண்டும் ஒரு முறை
நிரம்பித்
தளும்பியது


குறிப்பு : (இது ‘
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

Read more...

வெற்றுத்திண்ணை

தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்

Read more...

சில நிமிடங்கள் கொடுங்கள்

தயவுசெய்து
சில நிமிடங்கள் கொடுங்கள்
ஆடைகளை களைகிறேன்
விலங்காகிறேன்
பின் கண்டிப்பாக வாலாட்டுகிறேன்

Read more...

முதல் நாள் முதல்

எனக்கு இந்த dress வேணாம்.எனக்கு அந்த பூப்போட்டது தான் வேணும்

நீ இப்போ schoolக்கு போகப்போற.இது uniform dress.இதை போட்டாதான் schoolக்கு போகமுடியும்.

எதுக்கு school போகனும்?

படிக்கனும் னா school போகனும்டா கண்ணு.

அப்ப நான் படிக்கல.

முதல் நாளே இப்படி சொல்லாத கண்ணு.படிச்சாதான் வேலைக்கு போகமுடியும்.வேலைக்கு போனாதான் பணம் சம்பாதிக்கமுடியும்.

எனக்கு இப்ப அந்த dress தான் வேணும்.பணம் எல்லாம் வேணாம்.

பணம் இருந்தாதான் கண்ணு நல்லா வாழமுடியும்.


எவ்வளவு பொய்கள்....

Read more...

பூப்பறித்தல்

எதிர்பார்க்கவேயில்லை
இந்தக்காலைப்பொழுதில்
சற்றுமுன் மலர்ந்த
பூ
பறிக்கபடுமென்று

Read more...

தவிப்பு

திசை மாறிய
பெரும் காற்றில்
என் அறையின்
எல்லா கதவுகளும்
அடைவதும் திறப்பதுமாய்

Read more...

அவசரமாக

மேகம் சூழ்ந்த மாலையில்
அவசரமாக
வானம் பார்த்தனர்

யாரும் நிற்பதில்லை
நிறுத்தங்களில் கூட
கோடையில் கூட

Read more...

தூரங்கள்

1.
காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
அந்த குழந்தை

2.
அந்த
முதல் வார்த்தைக்காக
இன்னும் எவ்வளவு
பேச வேண்டி இருக்குமோ
இன்னும் எவ்வளவு மௌனங்களை
கடந்து செல்ல வேண்டுமோ

Read more...

உயிர்த்திருத்தல்

வேர்களை பத்திரப்படுத்தும்
பூந்தொட்டி
மெல்ல தீண்டுகிறது
உதிர்ந்து விழும் மலர்களை

Read more...

கால் தடங்கள்

பற்றிய கைகள்
விலகுகின்றன பதற்றம்
ஏதுமற்று

மெல்லத் திரும்புகிறோம்
அவரவர்
வெளிகளுக்கு

விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன

Read more...

கோடைக்கால அந்தி

இறுக்கமான போர்வை
மேலும்
ஈரமான கனவொன்று
வேண்டும்

அல்லது

இந்த மாலையை
எதிர்கொள்ள

ஒரு
ஆழமான
முத்தம் மட்டும்

special Dedication: Mr and Mrs.Ambakur

Read more...

விடாது துர‌த்தும் கேள்விக‌ள்

என்னை தொடர் பதிவிற்கு அழைத்த லாவண்யாவிற்கு நன்றி.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

லஷ்மண் ஆக பிறந்து இலக்குவனாகி இப்பொழுது இராவணன்

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கண்கள் கலங்குவது என்றால் சில இரவுகளுக்கு முன் மிகுந்த மகிழ்ச்சியில் ஒரு தாலாட்டின் நீட்சியாக
மனம் கலங்குவது என்றால் இந்த நொடியில் கூட. யார் கல் எறிந்தார்கள் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

சத்தி்யமா இல்லை ;)

4.பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கை சாம்பார் ;)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ம்ம்ம். துளிர்த்து வேர்த்து (வியர்த்து அல்ல) பின் வீழ்ந்தும் விடும் சில நாட்களிலே.
சிலவைகையல் நீண்டு கொண்டே இருக்கிறது என் பாதையில் துனையாக நிழலாகவும்.

பெரும்பாலான உறவுகள் உடனே தொடங்கியது தான் (வாழ்க்கை மிக சிறியது மக்களே)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல் பிடிக்கும் (பழவேற்காடு கரையில்)

அருவி - எனக்கும் அதற்குமான உறவு மிக உன்னதமானது. குளிக்க மட்டுமல்ல குதிக்ககூட விரும்புவேன்
அதி்ரபல்லி(கேரளா) மற்றும் high forest (வால் பாறை)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அறிமுகமற்ற ஆண் - உடல் அசைவுகள் (body language)

அறிமுகமற்ற பெண் - கண் , முகம் மற்றும் முலை

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்சது : உண்மைக்குள் ஒளிய முயற்சிப்பது

பிடிக்காதது: பொய்சொல்ல முயற்சித்து (அலுவலகத்தில் மட்டும்) தோற்பது

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?


சரி பாதி யாருன்னு தேடி சலிச்சிட்டேன். நீங்க வேற.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாரும் பக்கதுல இல்லைன்னா வருந்துவேன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

அடப்போங்கப்பா. ;)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் :))) (radio mirchi)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வானத்தின் நீலம்

14.பிடித்த மணம்?

பெண்களின் வாசனை திரவியங்கள்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

பதி்விடப்படாத கவிதை ஒன்று

17. பிடித்த விளையாட்டு?

விளையாட்டு என்பது உன் அருகாமையை நான் கொண்டாடுவதே (காடு- ஜெ.மோ)

18.கண்ணாடி அணிபவரா?

இப்ப இல்ல.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ingmar bergman and micheal angel antonioni

மகேந்திரன்

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க (அருமை.)

21.பிடித்த பருவ காலம் எது?

உன் அருகாமையோடு எல்லா காலமும்.எல்லா பருவமும் அழகுதானே.


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
ஆத்மாநாம் கவிதைகள் (மீள் வாசிப்பு)
நீராலானது. (மனுஷ்யபுத்திரன்)(மீள் வாசிப்பு)

23.உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எனக்கு பிடித்த புகைப்படம் எடுக்கும் பொழுது

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது:மௌனம் மட்டும் மௌன ராகம்

பிடிக்காதது: எனக்கு புரியாத மொழியில்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

rajasthan

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனிமை கொடுத்த திறமை நிறைய இருக்கு.
காலம் திசைகாட்டுமென காத்திருக்கிறேன்

புகைப்படம்
கவிதை
திரைக்கதை

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பிரிவு

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

காமம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

அதிரபள்ளி அருவி

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

உயிர்ப்போடு

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

மனைவி இல்லாதவங்க கிட்ட இப்படி கேட்டா அப்புறம் dont plug words from my mouths :)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

கனவுக்கும் நினைவுக்கும் இடையே ஆடிக்கொண்டிருக்கும் ஒரு கடிகாரம்

Read more...

திருமணம்

ஏறத்தாழ
2532 சட்டங்களின் படி
நான் தண்டனை பெறும் குற்றவாளி
மறைத்தும் தப்பித்தும்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்

திருமணத்திற்கு
பிறகு
இன்னும் கூடுதலாக
சில சட்டங்களின் படி

Read more...

மனோநிலை - 5

வெற்றுக்கோப்பை - ராஜா சந்திரசேகர்

வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க

நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை

------------------------------------------------------------

முடிவிலி - ரெஜோவாசன்

ஒவ்வொரு பின்னிரவின் கரு நிழலிருளிலும்
சுடும் கரை மணல் தொடுகையிலும் …

நிசப்த்தமான தெருக்களில்
நீண்ட தனி நடைகளிலும் …
மழை முடிந்த பின்
ஆடைகள் ஊதிப் பார்க்கும் வாடையிலும் …

கூட ஒட்டி வரும் தனிமையிலும் …

தேடிப்பார்க்கிறேன்
நாம் சந்தித்ததற்கான தடையங்கள்
ஏதேனும் உளதா என ..

நேற்றைய சந்திப்புகள் வெகுதூரம்
தாண்டிச் சென்றுவிட்டிருக்கின்றன
இன்றுகள் தொடர்ச்சியாக
இணைந்து கொண்டிருக்கின்றன அதே
இரயிலின் கடைசிப் பெட்டிகளாக ...

தவிர்க்க முடிவதில்லை
தென்னங் கீற்றுகளிடை
சிரித்திடும் விண்மினிகளின்
நினைவு படுத்துதலை ...

தனித்துண்ணும் எனை எள்ளும்
முட் கரண்டிகளின்
வளைந்து குத்தும் பரிகாசங்களை ...

வெகுநேரம்
வெறித்துப் பார்க்கப்படும்
புத்தகங்கள் வெறுப்புற்றுக் காற்றுடன்
உரையாடும் சரசரப்பை ...

நடு இரவில்
தன் நிர்வாணம் பார்க்கப்படுவதை விரும்பாமல்
வெளிச்சம் சுருக்கிக் கொள்ளும்
இரவு விளக்கின் பின்
ஒளிந்து கொள்ளப் போகும்
சுவர் பல்லியை ..

தவிர்க்க முடிவதில்லை
மீண்டும் மீண்டும்
சுற்றிச் சுழன்று
மாட்டிக் கொள்கிறேன்
மெல்லினங்கள் ஏற்படுத்தும்
மீள முடியாக் காயங்களில் …

சுழல் மீண்டு வரும் பொழுது
எல்லாம் மறந்து
தேடத் துவங்குவேன் மீண்டும்
நாம் சந்தித்ததற்கான தடையங்கள்
ஏதேனும் உளதா என ..

எல்லாத் தடயங்களையும்
என்னுள் தொலைத்துவிட்டு
இல்லை ..

மறைத்து வைத்த இடம்
மறந்து விட்டு போய் விட்டு

Read more...

திண்ணைத்தூண்

நீ எனக்கு மிகவும் நெருக்கமா இருக்க. உங்கிட்ட என்னை பத்தி எல்லாம் சொல்லனும்னு ஆசையா வரேன்.ஆனா உனக்கு என் வாழ்க்கையும் இறந்தகாலமும் அதன் வலிகளும் பிடிக்ககாதப்போ நான் இந்த உலகத்தின் காதை நெருங்குறேன். ரகசியம் பேச. என்னால இனியும் தனியா பேச முடியாது.

திண்ணை பார்த்திருக்கியா? குழந்தையா இருக்கும் போது திண்ணையில தூண்ல தலை சாஞ்சி உட்கார்ந்திருக்கியா? தெருவ பார்த்துட்டே? அப்புறம்...அழுதிருக்கியா?

நான் அழுதிருக்கேன்.அழுகை வறண்டு வெயிலை பார்த்துட்டே உட்கார்ந்திருக்கேன் வயித்துல பசி எடுக்கிறவரை.எதுக்கு தெரியுமா? மிட்டாய்க்கோ சொக்காக்கோ எந்த பொம்மைக்காகவோ நினைவு தெரிஞ்சு அழுததில்ல. மனிதர்களுக்காக மட்டும் தான். அப்ப இருந்து இப்ப வரைக்கும். மனித அருகாமைக்கும் அன்பிற்கும் தான்.

எவ்ளோ நாள் அந்த தூண் ல சாஞ்சிட்டு வீதியில போறவங்கள பார்த்து எங்க வீட்டுக்கு வரமாட்டாங்களா எங்கிட்ட பேச மாட்டாங்களான்னு ஏங்கியிருக்கேன் தெரியுமா?
அவுங்க கடந்து போற வரைக்கும் பார்த்துட்டே இருப்பேன்.கடந்து போனதும் ஆழமான வலி ஒன்னு வரும் பாரு.ஏன் வலிக்குதுன்னு தெரியாது.என்ன பண்ணன்னு தெரியாது. கடந்து போனவங்க யாரையும் எனக்குத் தெரியாது.எந்த உறவும் கிடையாது.திரும்பி அவுங்கள நான் பார்ப்பனான்னு கூட கண்டிப்பா தெரியாது ஆனா நான் வருத்ததுல இருப்பேன் அவுங்க நிராகரிச்சதா. அந்த நிராகரிப்பை தாளாம சில நேரம் அழுதுடுவேன்.(இதை நகுலன் கூட ஒரு கவிதையா எழுதியிருப்பார்).

நான் பொய்சொல்லல. ஆனா இந்த உண்மை ஏன் எனக்கு மட்டும் நடக்குதுன்னு விளங்கினதே இல்லை. யார்கிட்டயும் சொல்றதும் இல்லை. பயமா இருக்கும்.
இப்ப வாவது எழுதறேன். 5-6 வயசுல என்ன பண்ணிட முடியும். ஆனா அப்பவே ரொம்ப யோசனைகள் வரும். நான் கைதவறி எதையும் போட்டு உடைச்சிட்டா அம்மாவோ அப்பாவோ அடிச்சாங்கன்னா ஏன் இவுங்களுக்கு புரியல. நான் ஒன்னும் தெரிஞ்சு பண்ணலையேன்னு. பண்ணனும் நினைச்சதில்லையே. இதை புரிஞ்சிக்காம அடிக்கிறாங்களேன்னு.

ஒரு குற்றம் நிகழ்கிறது.நீ காரணமாகுற. குற்ற உணர்வு உன்னை தின்னுது. உம்மேல நம்பிக்கை வெச்சு உனக்கு ஆறுதலா பேச வேண்டிய பெத்தவங்க ஏன் தப்பு செஞ்சன்னு அடிச்சா எப்படி அவுங்க பக்கதுல போகத்தோணும். இந்த மாதிரி யோசனைகளால அவுங்க கிட்டயிருந்து விலகியே இருப்பேன்.அப்ப எல்லாம் திண்ணைக்கு ஓடி வந்து உட்கார்ந்துடுவேன்.திண்ணை காட்டும் வீதியும் வானமும் அப்புறம் என்னை மிகவும் கவர்ந்த அந்தத் தூணும் என்னை பத்திரப்படுத்தும்.

எப்பவாவது உறவுகள் யாரும் வந்து என்னை கொஞ்சினா எவ்ளோ சந்தோசமா இருக்கும் தெரியுமா.வீடு அப்படியில்லை. வீடு பெரும்பாலும் கோடுகளால நிறைஞ்சது.கொஞ்சம் திரும்பினாலும் சில கோடுகள் அழிஞ்சிடும்.உன்னை காட்டிக்கொடுத்துடும். சற்று முன் இல்லை ஆனா இப்ப இனி நீ குற்றவாளி.இன்னைக்கு வீடு தன் இயல்பை அடையப்போறதில்லை.இயல்பை விட கொடிய மௌனம் வரப்போகிறது. அதற்கு நீ தான் காரணம்னு நினைக்கும் போது இன்னும் பலமடங்கு வருத்தம் வந்துசேரும். அதோடு அது நின்னுட போறதில்ல.தவறு மீண்டும் மீண்டும் சுட்டிக்ககாட்டப்படும்.தொடர்ந்து .அந்த குற்றம் என் அடையாளமாக்கப்படும். எல்லா பொழுதுலையும் எனக்கான ஆறுதல் அந்த திண்ணையும் தூணும் தான்.அதன் மேல தலைசாச்சிக்கலாம்.தலை சாய அம்மா மடி அனுமதி எப்பவும் மறுக்கப்படும் பொழுது ஒருத்தனுக்கு எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளும் அந்த மரத்துண்டின் ஆதூரம் இயற்கையின் அரவணைப்பா மிக ஆறுதலா இருக்கும்.

இப்பக்கூட சில தினங்களுக்கு முன்ன அந்த திண்ணைத்தூணை தேடினேன். ஆமாம்.நானோ என் அன்போ என் கண்ணீரோ நிராகரிக்கப்படும் போதெல்லாம் அதே தூணை தான் தேடி சாஞ்சிக்கிறேன் மனசுலயே.
உண்மையான கண்ணீர் மதிப்பளிக்கப்படும்னும் நமக்கு பிடிச்சவங்க அதை உணருவாங்க ன்னும் நினைச்சி நினைச்சி ஏமாந்து அந்த நம்பிக்கை மொதமொதல்ல உடைஞ்சது அங்க தான்.அழுது அழுது காய்ந்த கண்ணீரின் சுவடுகள் ஏற்படுத்தும் வரிகள் அந்த நிராகரிப்பின் அடையாளமாகி இனி அழுது என்னன்னு யோச்சிச்சி அந்த வெறுமையோட (வெறுமைன்னு அப்ப தெரியாது) முகத்தை கழுவிட்டு போய் சாப்பிட உட்கார்ந்த அதே பால்யம் தான் இன்னும் தொடருதோன்னு தோனது.ஆனா நல்லாபசிக்கும் அந்த மாதிரி பொழுதுல.மத்தவங்க மாதிரி சாப்பிடமுடியாம இருந்ததில்லை எந்த வருத்ததிலையும்.இந்த பழக்கத்தால தான் என்னால பலபேர காதலிக்க முடிஞ்சதோ.எல்லா காதலும் தோற்றும் இன்னும் தேடல் தொடரமுடியுதோ என்னமோ.

பக்கத்து வீட்டு உறவுகளுடன் மட்டும் அனுமதிக்கப்பட்ட ஓரு குழந்தை யின் மிகப்பெரிய - ஒரே மைதானம் அந்த திண்ணை தான். சண்டைபோட்ட வீடுகளா இருந்தாலும் திண்ணையும் குழந்தைகளும் சேர்ந்துதான் இருக்கும்.பெத்தவங்களுங்கு முக்கியமா படுற எதுவும் குழந்தைகளை பாதிக்கிறதில்லை. குழந்தைகளின் முக்கியங்களை பெத்தவங்க நெருங்குறதில்லை.

எப்பவாவது தான் மழைவரும் எங்க ஊர்ல.அப்ப அந்தத்தூண் பக்கத்துல உட்கார்ந்துட்டு உடல்முழுக்க சாரல் அடிக்கும் பொழுது உலகத்தின் மொத்த சந்தோசத்தையும் எனக்கே எனக்கா பரிசளிப்பதாக நெனச்சு கைவிரித்து மழையை தீண்டுவேன்.ஆனா அதுவும் நீண்ட நேரம் நீடிச்சதில்லை. மழையில நெனஞ்சா காய்ச்சல் வரும். வீட்டுக்கு உள்ள போயிறனும் உடனடியா எந்த எதிர்ப்பும் காட்டாம. எனக்கும் எந்த எதிர்ப்பும் காட்டி பழக்கமில்லை. ஏத்துக்க வேண்டியது தான்.அப்புறம் தனியாக வந்து அழுதுக்கலாம்.
மழைக்கு வீட்டு கதவுகள் சாத்தப்படும்.

நல்ல வேளையாக கூரை வீடுகளுக்கு மழை சப்தத்தையும் இடிசத்ததையும் அன்னியப்படுத்த இயலாது. மனதில் மழை பெய்ய தொடங்கியது அப்படி தான்.ஏகாந்தம் உணரத்தொடங்கியதும் அப்படி தான்.அதிகம் மௌனமானதும் அப்படித்தான். மனதளவில் திண்ணைத்தூண் அருகில் சாய்ந்து மழையில் கால் கை நினைத்து பின் முகம் நினைத்து மழை நிரம்பி வழியும் நொடிகளில் படர்ந்த வெண்திரையில் கடந்து செல்லும் வாகணங்களின் அழகு மனிதர்களின் அவசரம்.குழந்தைகளின் மௌனமான சந்தோசம். ஆமாம். நிறைய குழந்தைகள் மௌனமாகத்தான் தன் சந்தோசத்தை அனுபவிக்குது.

இப்ப வளரும் என்னைப்போல குழந்தைகளுக்கு திண்ணையோ தூண்களோ பெரும்பாலும் கிடைக்கிறதில்லை.கிடைக்கப்போறதுமில்லை.அப்படி ஒன்னு இருக்குன்னு இருந்ததுன்னு கூட தெரியாது. ஆனாலும் எனக்கு இப்ப எழுத்து மூலமா வாழ்க்கையின் அழுத்தங்கள்ல இருந்து தப்பிக்க முடியும் னு தெரிஞ்ச மாதிரி அந்த சின்னபையனுக்கு சற்றே கரடுமுரடாண அந்த திண்ணைதூன் தெரிஞ்சிருக்கு. திண்ணைத்தூண் இல்லாத குழந்தைகளுக்கு வேற எதையோ காலம் விரல் நீட்டி காட்டியிருக்கலாம். அதுகளும் அதுல சாய்ந்திருக்கலாம்.

இந்த உலகத்துல இரண்டு வகையான மனிதர்கள் இருக்காங்க.ஒன்னு அன்பை தேக்கி வெச்சி வீணாக்குறவங்க. இன்னொன்னு அன்புக்காக ஏங்கி ஏங்கி சாகுறவங்க.இந்த இருவரும் பெரும்பாலும் சந்திக்கிறதேயில்லை.சந்திக்கும் பொழுது அன்பை பற்றி பேசிக்கிறதில்லை.

இந்த பெத்தவங்க மட்டும் கொஞ்சம் அன்பை அப்ப அப்ப பகிர்ந்துட்டா எப்படி இருக்கும்.

Read more...

மனோநிலை - 4

திருவினை - யாத்ரா

திருவினையாகாத முயற்சிகளை நொந்து
கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன்
கடைசியாக
அதற்கு முன்பாக
மலங்கழித்து விடலாமென
கழிவறை போக
பீங்கானில் தேரைகளிருக்க
கழிக்காது திரும்பி
வரும் வழியில்
எறும்புகளின் ஊர்வலத்திற்கு
இடையூறின்றி கவனமாக
கடந்து வந்தேன் அறைக்குள்
கரிசனங்கள் பிறந்து விடுகிற
கடைசி தருணங்களின்
வினோதத்தில் புன்சிரித்தேன்
என்றுமில்லாமல் அதிகமாய் வியர்க்க
பொத்தானையழுத்தப் போகையில்
சிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை
பார்வையில் இடறியது
40000 உயிர்கள் மாண்டுபோன
செய்தி தாங்கிய
தினசரி அருகிருந்தது
விசிறயேதேனும் அகப்படுமாவெனத் தேடுகையில்
சாம்பல் கிண்ணத்தில்
பிணங்களென்றிருக்கும்
துண்டுக் குவியல்களைக் கண்டு
கடைசி சிகரெட் பிடிக்கும்
ஆசையையும் கைவிட வேண்டியதாயிற்று
சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு
காத்திருக்கும் கயிற்றிற்க்கிரையாக
கதவைச் சாற்ற
கதவிடுக்கில் நசுங்கியிரண்டான
பல்லியின் வாயிலிருந்து
தப்பிப் பறந்ததொரு பூச்சி



கவிதை தனிப்பட்ட முறையில் கருத்தியல் ரீதியாக என்னை மிகவும் பாதித்தது.
அதையும் தாண்டி

//சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு//



ஆத்மநாம் - நகுலன் இவுங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் னு சொன்னா அது சாதாரணம்.
அவுங்களுக்கும் எனக்குமான நெருக்கத்திற்கு வார்த்தைகளே இல்லை ன்னு நினைச்சேன்.
தூக்குல தொங்க போகும் போது முத்தமிடுவது ங்கிறது இருக்கே.அது அதை உணர்த்துது.

ரசிகன்னு சொல்ல முடியாது.
பிடிக்கும் னு சொல்லமுடியாது
காதலன் ன்னும் சொல்ல முடியாது
வெவ்வேறு காலத்தில் இருந்த ஒருத்தனோட ஆத்மார்த்தமான உறவு.
உடலுக்கும் உணர்வுக்குமான நெருக்கம்.

ஒரு வேளை இதுதான் பக்தி இலக்கியத்துக்கெல்லாம் அடிப்படையோ என்னவோ.

நான் உன்னை பார்த்ததில்லை.
தீண்டினதில்லை.
நீ நான் நினைச்ச மாதிரி இருக்கியான்னு இருந்தி்ருப்பியான்னு கூடத் தெரியாது.

உன்னை பற்றிய சில வார்த்தைகள்.அது வழியா உன்னை முதல்ல அணுகுகிறேன்.பிறகு நீ எனக்கு நெருக்கமா அறிமுகமாகிற தருணம்.அதாவது நான் என் உணர்வுகளால உன் உணர்வுகள் (வார்த்தைகள்) வழியா உன்னை நெருங்கும் தருணம். இந்த பிரபஞ்சத்தில் இந்த வெளியில் கறைந்து இருக்கும் உன்னை என் பார்வை கண்டடையும் தருணம்

என்ன சொல்லியும் மனசு நிறையல.
மனதை மொழிபெயர்க்க இன்னும் பழகவேணும்.இன்னும் பயணிக்கனும் மொழியில்.

Read more...

மனோநிலை -3


அடிமைகளை உருவாக்குவது எப்படி - அனிதா

மிக எளிது.
ஒரு புன்னகையில் துவங்கி
நட்பு, பிரியம் என மெல்ல, மிக மெல்ல
முன்னேறவும்.
உனக்கென நான் (மட்டுமே) இருக்கிறேனென
புரிதல் உண்டாக்கவேண்டும்

ஆரத்தழுவிக்கொள்ளலாம்
காமம் இல்லாமலும்
பின் காமத்தோடும்.

என்னைப் பிரிந்தால்
விஷப்பாம்புகளுக்கு இரையாவாய் என்றும்
எச்சில் இலைகளிலிருந்து
உணவு உண்ண நேரும் என்றும்
எச்சரித்தபடியிருப்பது உசிதம்

எண்ணற்ற முத்தங்கள்
நேரம் காலம் பார்க்காமல் தரவேண்டும்
பெறவேண்டும்.

வெளிர் நீல வானில்
பறவைகள் பறப்பதைக் காட்டுவது
சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொள்ள உதவும்.

ஆயிற்று.
வருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்

மிகக் கவனம்...
அடிமைகள் உங்களைப்பற்றி
பேசிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்

அனிதா கவிதைள்

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP