திண்ணைத்தூண்

நீ எனக்கு மிகவும் நெருக்கமா இருக்க. உங்கிட்ட என்னை பத்தி எல்லாம் சொல்லனும்னு ஆசையா வரேன்.ஆனா உனக்கு என் வாழ்க்கையும் இறந்தகாலமும் அதன் வலிகளும் பிடிக்ககாதப்போ நான் இந்த உலகத்தின் காதை நெருங்குறேன். ரகசியம் பேச. என்னால இனியும் தனியா பேச முடியாது.

திண்ணை பார்த்திருக்கியா? குழந்தையா இருக்கும் போது திண்ணையில தூண்ல தலை சாஞ்சி உட்கார்ந்திருக்கியா? தெருவ பார்த்துட்டே? அப்புறம்...அழுதிருக்கியா?

நான் அழுதிருக்கேன்.அழுகை வறண்டு வெயிலை பார்த்துட்டே உட்கார்ந்திருக்கேன் வயித்துல பசி எடுக்கிறவரை.எதுக்கு தெரியுமா? மிட்டாய்க்கோ சொக்காக்கோ எந்த பொம்மைக்காகவோ நினைவு தெரிஞ்சு அழுததில்ல. மனிதர்களுக்காக மட்டும் தான். அப்ப இருந்து இப்ப வரைக்கும். மனித அருகாமைக்கும் அன்பிற்கும் தான்.

எவ்ளோ நாள் அந்த தூண் ல சாஞ்சிட்டு வீதியில போறவங்கள பார்த்து எங்க வீட்டுக்கு வரமாட்டாங்களா எங்கிட்ட பேச மாட்டாங்களான்னு ஏங்கியிருக்கேன் தெரியுமா?
அவுங்க கடந்து போற வரைக்கும் பார்த்துட்டே இருப்பேன்.கடந்து போனதும் ஆழமான வலி ஒன்னு வரும் பாரு.ஏன் வலிக்குதுன்னு தெரியாது.என்ன பண்ணன்னு தெரியாது. கடந்து போனவங்க யாரையும் எனக்குத் தெரியாது.எந்த உறவும் கிடையாது.திரும்பி அவுங்கள நான் பார்ப்பனான்னு கூட கண்டிப்பா தெரியாது ஆனா நான் வருத்ததுல இருப்பேன் அவுங்க நிராகரிச்சதா. அந்த நிராகரிப்பை தாளாம சில நேரம் அழுதுடுவேன்.(இதை நகுலன் கூட ஒரு கவிதையா எழுதியிருப்பார்).

நான் பொய்சொல்லல. ஆனா இந்த உண்மை ஏன் எனக்கு மட்டும் நடக்குதுன்னு விளங்கினதே இல்லை. யார்கிட்டயும் சொல்றதும் இல்லை. பயமா இருக்கும்.
இப்ப வாவது எழுதறேன். 5-6 வயசுல என்ன பண்ணிட முடியும். ஆனா அப்பவே ரொம்ப யோசனைகள் வரும். நான் கைதவறி எதையும் போட்டு உடைச்சிட்டா அம்மாவோ அப்பாவோ அடிச்சாங்கன்னா ஏன் இவுங்களுக்கு புரியல. நான் ஒன்னும் தெரிஞ்சு பண்ணலையேன்னு. பண்ணனும் நினைச்சதில்லையே. இதை புரிஞ்சிக்காம அடிக்கிறாங்களேன்னு.

ஒரு குற்றம் நிகழ்கிறது.நீ காரணமாகுற. குற்ற உணர்வு உன்னை தின்னுது. உம்மேல நம்பிக்கை வெச்சு உனக்கு ஆறுதலா பேச வேண்டிய பெத்தவங்க ஏன் தப்பு செஞ்சன்னு அடிச்சா எப்படி அவுங்க பக்கதுல போகத்தோணும். இந்த மாதிரி யோசனைகளால அவுங்க கிட்டயிருந்து விலகியே இருப்பேன்.அப்ப எல்லாம் திண்ணைக்கு ஓடி வந்து உட்கார்ந்துடுவேன்.திண்ணை காட்டும் வீதியும் வானமும் அப்புறம் என்னை மிகவும் கவர்ந்த அந்தத் தூணும் என்னை பத்திரப்படுத்தும்.

எப்பவாவது உறவுகள் யாரும் வந்து என்னை கொஞ்சினா எவ்ளோ சந்தோசமா இருக்கும் தெரியுமா.வீடு அப்படியில்லை. வீடு பெரும்பாலும் கோடுகளால நிறைஞ்சது.கொஞ்சம் திரும்பினாலும் சில கோடுகள் அழிஞ்சிடும்.உன்னை காட்டிக்கொடுத்துடும். சற்று முன் இல்லை ஆனா இப்ப இனி நீ குற்றவாளி.இன்னைக்கு வீடு தன் இயல்பை அடையப்போறதில்லை.இயல்பை விட கொடிய மௌனம் வரப்போகிறது. அதற்கு நீ தான் காரணம்னு நினைக்கும் போது இன்னும் பலமடங்கு வருத்தம் வந்துசேரும். அதோடு அது நின்னுட போறதில்ல.தவறு மீண்டும் மீண்டும் சுட்டிக்ககாட்டப்படும்.தொடர்ந்து .அந்த குற்றம் என் அடையாளமாக்கப்படும். எல்லா பொழுதுலையும் எனக்கான ஆறுதல் அந்த திண்ணையும் தூணும் தான்.அதன் மேல தலைசாச்சிக்கலாம்.தலை சாய அம்மா மடி அனுமதி எப்பவும் மறுக்கப்படும் பொழுது ஒருத்தனுக்கு எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளும் அந்த மரத்துண்டின் ஆதூரம் இயற்கையின் அரவணைப்பா மிக ஆறுதலா இருக்கும்.

இப்பக்கூட சில தினங்களுக்கு முன்ன அந்த திண்ணைத்தூணை தேடினேன். ஆமாம்.நானோ என் அன்போ என் கண்ணீரோ நிராகரிக்கப்படும் போதெல்லாம் அதே தூணை தான் தேடி சாஞ்சிக்கிறேன் மனசுலயே.
உண்மையான கண்ணீர் மதிப்பளிக்கப்படும்னும் நமக்கு பிடிச்சவங்க அதை உணருவாங்க ன்னும் நினைச்சி நினைச்சி ஏமாந்து அந்த நம்பிக்கை மொதமொதல்ல உடைஞ்சது அங்க தான்.அழுது அழுது காய்ந்த கண்ணீரின் சுவடுகள் ஏற்படுத்தும் வரிகள் அந்த நிராகரிப்பின் அடையாளமாகி இனி அழுது என்னன்னு யோச்சிச்சி அந்த வெறுமையோட (வெறுமைன்னு அப்ப தெரியாது) முகத்தை கழுவிட்டு போய் சாப்பிட உட்கார்ந்த அதே பால்யம் தான் இன்னும் தொடருதோன்னு தோனது.ஆனா நல்லாபசிக்கும் அந்த மாதிரி பொழுதுல.மத்தவங்க மாதிரி சாப்பிடமுடியாம இருந்ததில்லை எந்த வருத்ததிலையும்.இந்த பழக்கத்தால தான் என்னால பலபேர காதலிக்க முடிஞ்சதோ.எல்லா காதலும் தோற்றும் இன்னும் தேடல் தொடரமுடியுதோ என்னமோ.

பக்கத்து வீட்டு உறவுகளுடன் மட்டும் அனுமதிக்கப்பட்ட ஓரு குழந்தை யின் மிகப்பெரிய - ஒரே மைதானம் அந்த திண்ணை தான். சண்டைபோட்ட வீடுகளா இருந்தாலும் திண்ணையும் குழந்தைகளும் சேர்ந்துதான் இருக்கும்.பெத்தவங்களுங்கு முக்கியமா படுற எதுவும் குழந்தைகளை பாதிக்கிறதில்லை. குழந்தைகளின் முக்கியங்களை பெத்தவங்க நெருங்குறதில்லை.

எப்பவாவது தான் மழைவரும் எங்க ஊர்ல.அப்ப அந்தத்தூண் பக்கத்துல உட்கார்ந்துட்டு உடல்முழுக்க சாரல் அடிக்கும் பொழுது உலகத்தின் மொத்த சந்தோசத்தையும் எனக்கே எனக்கா பரிசளிப்பதாக நெனச்சு கைவிரித்து மழையை தீண்டுவேன்.ஆனா அதுவும் நீண்ட நேரம் நீடிச்சதில்லை. மழையில நெனஞ்சா காய்ச்சல் வரும். வீட்டுக்கு உள்ள போயிறனும் உடனடியா எந்த எதிர்ப்பும் காட்டாம. எனக்கும் எந்த எதிர்ப்பும் காட்டி பழக்கமில்லை. ஏத்துக்க வேண்டியது தான்.அப்புறம் தனியாக வந்து அழுதுக்கலாம்.
மழைக்கு வீட்டு கதவுகள் சாத்தப்படும்.

நல்ல வேளையாக கூரை வீடுகளுக்கு மழை சப்தத்தையும் இடிசத்ததையும் அன்னியப்படுத்த இயலாது. மனதில் மழை பெய்ய தொடங்கியது அப்படி தான்.ஏகாந்தம் உணரத்தொடங்கியதும் அப்படி தான்.அதிகம் மௌனமானதும் அப்படித்தான். மனதளவில் திண்ணைத்தூண் அருகில் சாய்ந்து மழையில் கால் கை நினைத்து பின் முகம் நினைத்து மழை நிரம்பி வழியும் நொடிகளில் படர்ந்த வெண்திரையில் கடந்து செல்லும் வாகணங்களின் அழகு மனிதர்களின் அவசரம்.குழந்தைகளின் மௌனமான சந்தோசம். ஆமாம். நிறைய குழந்தைகள் மௌனமாகத்தான் தன் சந்தோசத்தை அனுபவிக்குது.

இப்ப வளரும் என்னைப்போல குழந்தைகளுக்கு திண்ணையோ தூண்களோ பெரும்பாலும் கிடைக்கிறதில்லை.கிடைக்கப்போறதுமில்லை.அப்படி ஒன்னு இருக்குன்னு இருந்ததுன்னு கூட தெரியாது. ஆனாலும் எனக்கு இப்ப எழுத்து மூலமா வாழ்க்கையின் அழுத்தங்கள்ல இருந்து தப்பிக்க முடியும் னு தெரிஞ்ச மாதிரி அந்த சின்னபையனுக்கு சற்றே கரடுமுரடாண அந்த திண்ணைதூன் தெரிஞ்சிருக்கு. திண்ணைத்தூண் இல்லாத குழந்தைகளுக்கு வேற எதையோ காலம் விரல் நீட்டி காட்டியிருக்கலாம். அதுகளும் அதுல சாய்ந்திருக்கலாம்.

இந்த உலகத்துல இரண்டு வகையான மனிதர்கள் இருக்காங்க.ஒன்னு அன்பை தேக்கி வெச்சி வீணாக்குறவங்க. இன்னொன்னு அன்புக்காக ஏங்கி ஏங்கி சாகுறவங்க.இந்த இருவரும் பெரும்பாலும் சந்திக்கிறதேயில்லை.சந்திக்கும் பொழுது அன்பை பற்றி பேசிக்கிறதில்லை.

இந்த பெத்தவங்க மட்டும் கொஞ்சம் அன்பை அப்ப அப்ப பகிர்ந்துட்டா எப்படி இருக்கும்.

Read more...

மனோநிலை - 4

திருவினை - யாத்ரா

திருவினையாகாத முயற்சிகளை நொந்து
கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன்
கடைசியாக
அதற்கு முன்பாக
மலங்கழித்து விடலாமென
கழிவறை போக
பீங்கானில் தேரைகளிருக்க
கழிக்காது திரும்பி
வரும் வழியில்
எறும்புகளின் ஊர்வலத்திற்கு
இடையூறின்றி கவனமாக
கடந்து வந்தேன் அறைக்குள்
கரிசனங்கள் பிறந்து விடுகிற
கடைசி தருணங்களின்
வினோதத்தில் புன்சிரித்தேன்
என்றுமில்லாமல் அதிகமாய் வியர்க்க
பொத்தானையழுத்தப் போகையில்
சிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை
பார்வையில் இடறியது
40000 உயிர்கள் மாண்டுபோன
செய்தி தாங்கிய
தினசரி அருகிருந்தது
விசிறயேதேனும் அகப்படுமாவெனத் தேடுகையில்
சாம்பல் கிண்ணத்தில்
பிணங்களென்றிருக்கும்
துண்டுக் குவியல்களைக் கண்டு
கடைசி சிகரெட் பிடிக்கும்
ஆசையையும் கைவிட வேண்டியதாயிற்று
சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு
காத்திருக்கும் கயிற்றிற்க்கிரையாக
கதவைச் சாற்ற
கதவிடுக்கில் நசுங்கியிரண்டான
பல்லியின் வாயிலிருந்து
தப்பிப் பறந்ததொரு பூச்சிகவிதை தனிப்பட்ட முறையில் கருத்தியல் ரீதியாக என்னை மிகவும் பாதித்தது.
அதையும் தாண்டி

//சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு//ஆத்மநாம் - நகுலன் இவுங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் னு சொன்னா அது சாதாரணம்.
அவுங்களுக்கும் எனக்குமான நெருக்கத்திற்கு வார்த்தைகளே இல்லை ன்னு நினைச்சேன்.
தூக்குல தொங்க போகும் போது முத்தமிடுவது ங்கிறது இருக்கே.அது அதை உணர்த்துது.

ரசிகன்னு சொல்ல முடியாது.
பிடிக்கும் னு சொல்லமுடியாது
காதலன் ன்னும் சொல்ல முடியாது
வெவ்வேறு காலத்தில் இருந்த ஒருத்தனோட ஆத்மார்த்தமான உறவு.
உடலுக்கும் உணர்வுக்குமான நெருக்கம்.

ஒரு வேளை இதுதான் பக்தி இலக்கியத்துக்கெல்லாம் அடிப்படையோ என்னவோ.

நான் உன்னை பார்த்ததில்லை.
தீண்டினதில்லை.
நீ நான் நினைச்ச மாதிரி இருக்கியான்னு இருந்தி்ருப்பியான்னு கூடத் தெரியாது.

உன்னை பற்றிய சில வார்த்தைகள்.அது வழியா உன்னை முதல்ல அணுகுகிறேன்.பிறகு நீ எனக்கு நெருக்கமா அறிமுகமாகிற தருணம்.அதாவது நான் என் உணர்வுகளால உன் உணர்வுகள் (வார்த்தைகள்) வழியா உன்னை நெருங்கும் தருணம். இந்த பிரபஞ்சத்தில் இந்த வெளியில் கறைந்து இருக்கும் உன்னை என் பார்வை கண்டடையும் தருணம்

என்ன சொல்லியும் மனசு நிறையல.
மனதை மொழிபெயர்க்க இன்னும் பழகவேணும்.இன்னும் பயணிக்கனும் மொழியில்.

Read more...

மனோநிலை -3


அடிமைகளை உருவாக்குவது எப்படி - அனிதா

மிக எளிது.
ஒரு புன்னகையில் துவங்கி
நட்பு, பிரியம் என மெல்ல, மிக மெல்ல
முன்னேறவும்.
உனக்கென நான் (மட்டுமே) இருக்கிறேனென
புரிதல் உண்டாக்கவேண்டும்

ஆரத்தழுவிக்கொள்ளலாம்
காமம் இல்லாமலும்
பின் காமத்தோடும்.

என்னைப் பிரிந்தால்
விஷப்பாம்புகளுக்கு இரையாவாய் என்றும்
எச்சில் இலைகளிலிருந்து
உணவு உண்ண நேரும் என்றும்
எச்சரித்தபடியிருப்பது உசிதம்

எண்ணற்ற முத்தங்கள்
நேரம் காலம் பார்க்காமல் தரவேண்டும்
பெறவேண்டும்.

வெளிர் நீல வானில்
பறவைகள் பறப்பதைக் காட்டுவது
சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொள்ள உதவும்.

ஆயிற்று.
வருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்

மிகக் கவனம்...
அடிமைகள் உங்களைப்பற்றி
பேசிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்

அனிதா கவிதைள்

Read more...

மனோநிலை - 2

ஆத்மநாம் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை.

என் (என்னை போன்ற பிறநண்பர்கள்) இன்றைய மனநிலையே அப்படியே உணர்த்தும் இந்த கவிதையை அகநாழிகை பதிவில் படித்தேன்.


ஏதாவது செய் - ஆத்மாநாம்

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச்செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத்தவறினால்
உன்மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்ய மிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்ச வாயர்கள் மீது
எரிந்து விழச்செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத்தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்

--ஆத்மநாம்

Read more...

மனோநிலை - 1

நாய்கள் - நகுலன்

நானும் நாய்களைப் பார்த்திருக்கிறேன்
அவைகளின் அகாலத் துயிலை
அகலும் புட்டியைச் சுவைக்க
அவை செய்யும் வீண் முயற்சிகளை
வாந்தியை முழுங்குவதை
பேசுவதை நிறுத்தமுடியாமல் தவிப்பதை
பெண் துவாரம் தேடி அலைவதை
உணவு தடுக்கப்பட்டால் கடிப்பதை

-நகுலன் (நாய்கள்)

Read more...

இராவணன்

எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.இன்று முதல் மகாகவி திரு. இலக்குவண் அவர்கள் இராவணன் என்றே அழைக்கப்படுவார் ;)))

அன்புடைய நண்பர்களுக்கு,

இன்று முதல் என்னுடைய பெயரை இராவணன் என்று மாற்றியமைக்கிறேன்.அவ்வாறே என்னை அனைவரும் அழைக்கவேணும் என்றும் விரும்புகிறேன்.

பெயரில் என்ன இருக்கிறது?.
உண்மைதான்.
இருந்தும் இலக்குவண்(லஷ்மண்) என்ற புனித அடையாளம் முகமூடி போல சுமையாய் இருக்கிறது.இராவணன் என்பது எனக்கும் என் வாழ்விற்கும்மிகவும் நெருக்கமானதாகவும் ஒரு மனித அடையாளமாகவும் என் மொழி அடையாளமாகவும் இருப்பதாக தோன்றுகிறது.

நன்றி

பி.குறிப்பு : இங்கே புனிதம் என்பது பொது புத்தி சார்ந்த புனிதத்தை குறிப்பதே அன்றி
எந்த வார்த்தையிலும் இராவணனை தரம் தாழ்த்தி கூறுபவை அல்ல. இராவணனை மதிப்பதால் தான் அந்த பெயரை பெருமையுடன் ஏற்கிறேன்

Read more...

கால பைரவன் கண்சிமிட்டுகிறான்

பெரிதும் நிராகரிக்கபட்டவள்
ஒரு
அடிமையைக் கண்டடைகிறாள்

வேசிகள் என்று
இழிந்து திரிந்தவன்
கண்கள் பனிக்க
குழந்தையைத் தீண்டுகிறான்


காதலிக்கச்சொல்லிக் கெஞ்சியவன்
ஆழ்ந்து உறங்குகிறான்

எல்லோருக்கும்
அண்ணனாக வலம்வந்தவன்
நீலப்படங்களைத் தேடி அலைகிறான்

மென்முலைகள்
பெருத்துப் பாலூட்டி ஆகின்றன

என் இரவுகள்
சில
தினங்களுக்கு முன்
அழகாக இருந்தன


இந்த கவிதை வா.மு கோ.மு உடைய பாதிப்பு- சொல்லக்கூசும் கவிதைகள்

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP