அங்காடித்தெரு - ஒரு எதிர்வினை

திரு வசந்த பாலன் sir,


அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் அறிந்த காலத்தில் இருந்து அதன் மீதான ஈர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. ('வெயில்' தலைப்பும் அப்படித்தான்).
ஒரு மிக முக்கியமான பிரச்சனையை கையிலெடுத்துள்ளீர்கள்.


படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது


1)படத்திற்கு தேவையான தகவல்கள் சேகரித்தது.
2)ஒரு பல்பொருள் (மிகப்பெரிய) அங்காடியின் அனைத்து அங்குளங்களையும் பதிவுசெய்தது
3)ரங்கநாதன் தெருவின் வெவ்வேறான வாழ்கையை பதிவு செய்தது.
4)இந்த கதை கருவை பிடிவாதமாக எடுத்த உங்கள் தைரியம் மற்றும் மனோபலம்
5)அஞ்சலியின் நடிப்பு. (விருது வழங்கப்பட வேண்டும்)


படத்தை பார்த்து வந்து ஒரு அயர்வு/தூக்கமின்மை என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. அதற்கு காரணத்தையே இங்கே தருகிறேன்.


ஒரு சமூகப்பிரச்சனையை திரைப்படமாக அனுகும் போது மிகவும் கவனம் தேவை. காரணம் அது இங்கு இன்று வாழும் மக்களை அவர் தம் வாழ்வை நேரடியாக காட்சிப்படுத்தி அடையாளப்படுத்துகிறது. ஒரு செய்தித்தாள் நிருபரை விட பல மடங்கு பொறுப்புணர்வு ஒரு கலைஞனுக்கு தேவைப்படுகிறது.


ரங்கநாதன் தெருவிலோ குறிப்பிட்ட பல்பொருள் அங்காடியிலோ சுயதொழில் செய்யும் மற்றும் வேலைசெய்யும் மனிதர்கள் அதிகாரமேதுமற்ற ஏதிலிகள். அவர்களுடைய பிரச்சனை குறித்து பேச முற்பட்டிருக்கும் தாங்கள் இந்த படத்தின் சமூக எதிர்வினை(reaction in society after seeing the film) குறித்து யோசித்திருக்கலாம் என்பது என் ஆதங்கம்.


நாளை ஒரு அங்காடிக்குள் நுழையும் மக்கள் அங்கு வேலைபார்க்கும் பெண்கள் மீது வைக்கும் பார்வை எவ்வளவு இரக்கத்தோடும் குரூரமானதாகவும் இருக்கும். என்னை பொறுத்தவரை இப்பொழுது அந்த பெண்கள் அந்தரங்க இடத்தில் உள்ள காயங்களை காட்டுவதற்காக பொதுஇடத்தில் தங்கள் ஆடைகள் அவிழ்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவேபடுகிறது.நான் அந்த காட்சிகளை முழுவதுமாக நீக்கச்சொல்லவில்லை.அதே சமயம் முழுக்க முழுக்க அந்த காட்சிகளை சுற்றியே படம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.


திரைமறைவில் பெண்களை பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய அன்னாச்சிகளின் அதிகாரத்தை விடவும் வெள்ளித்திரையில் அதை கொண்டுவந்து வியாபாரம் ஆக்கியது மிக அதீதமான அதிகாரம் என்றே கருதுகிறேன். அதிகாரம் படைத்த இருவருக்கு இடையை நிகழும் ஒரு போரின் இடையில், சிக்கித்தவிக்கும் சாதாரண மக்களை போல் அந்த அங்காடியில் வேலை செய்யும் அனைத்து பெண்களின் நிலை உள்ளது.


'அங்காடித்தெரு' ஒரு சுதந்திரத்தை அவர்களுக்கு கையளிக்கவில்லை. அது இயலாது.


குறைந்த பட்சம் அவர்களின் வாழ்கையை அவர்களின் மனிதத்தையும் அவர்களுக்கான நியாயத்தை ஒரு அதிகாரத்திற்கு எதிராக முன்வைக்கவும் இல்லை.ஏனென்றால் படத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரும் மனிதர்களாகவே காட்டப்படவில்லை குற்றவாளிகளாக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.பின் அவர்களிடம் என்ன நியாயம் பேசமுடியும் என்ற இயலாமை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


பரிதாபத்திர்குறியதாய் காட்டப்பட்ட அந்த ஏதிலிகளின் வாழ்கை மீது அடுத்த சில தினகளுக்கு ஒரு இரக்கத்தை அங்கு செல்லும் அனைவருக்கும் ஏற்படுத்தும்.அதன் பிறகு எல்லாம் எதார்த்த நிலைக்கு திரும்பும். (அதாவது எதார்த்தம் மாறப்போவதில்லை). நம் வழியில் பார்க்கும் பிச்சைக்கு இடும் ஒரு ரூபாய்க்கும் வழியில் எதிர்கொள்ளும் எளிய மனிதரின் மீது நாம் செலுத்தும் ஒரு புன்னகைக்கும் மிக நீண்ட இடைவெளி உள்ளது.


சமூகப்பொறுப்புணர்வோட திரைப்படம் எடுக்க நினைத்தமைக்கு இப்பொழுதும் தலைவணங்கவே தயாராக இருக்கிறேன்.அடுத்த படத்தில் எளிய மனிதர்களை இன்னும் நெருங்கி பார்க்க முயற்சித்தால் அதில் நிறைய சுவாரசியங்கள் இருக்கும். நம்மால் யூகிக்க முடியாத அளவுக்கு நிறைய எதிர்வினைகள் இருக்கும். வாழ்கையை எதிர்கொள்வதில் எல்லோரும் வெவ்வேறானவர்கள். எல்லோரும் பரிதாபத்தை எதிர்பார்பவர்கள் அல்ல. மூத்திரத்தை வெளியேற்ற அனுமதிக்கபடாத பெண்ணின் பரிதாபம் விடவும் அவளுக்குறிய கோபம் பதிவுசெய்யப்படவேண்டியதாக உருமாறலாம்.


இந்த பதிவு எந்த உள்நோக்கத்தோடும் எழுதப்படவில்லை. எளிய மக்களை நெருங்கி பார்க்கும் ஒரு ஆவணப்புகைப்படக்கலைஞனின் ஆதங்கம் தான் இது.

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP