திண்ணைத்தூண்

நீ எனக்கு மிகவும் நெருக்கமா இருக்க. உங்கிட்ட என்னை பத்தி எல்லாம் சொல்லனும்னு ஆசையா வரேன்.ஆனா உனக்கு என் வாழ்க்கையும் இறந்தகாலமும் அதன் வலிகளும் பிடிக்ககாதப்போ நான் இந்த உலகத்தின் காதை நெருங்குறேன். ரகசியம் பேச. என்னால இனியும் தனியா பேச முடியாது.

திண்ணை பார்த்திருக்கியா? குழந்தையா இருக்கும் போது திண்ணையில தூண்ல தலை சாஞ்சி உட்கார்ந்திருக்கியா? தெருவ பார்த்துட்டே? அப்புறம்...அழுதிருக்கியா?

நான் அழுதிருக்கேன்.அழுகை வறண்டு வெயிலை பார்த்துட்டே உட்கார்ந்திருக்கேன் வயித்துல பசி எடுக்கிறவரை.எதுக்கு தெரியுமா? மிட்டாய்க்கோ சொக்காக்கோ எந்த பொம்மைக்காகவோ நினைவு தெரிஞ்சு அழுததில்ல. மனிதர்களுக்காக மட்டும் தான். அப்ப இருந்து இப்ப வரைக்கும். மனித அருகாமைக்கும் அன்பிற்கும் தான்.

எவ்ளோ நாள் அந்த தூண் ல சாஞ்சிட்டு வீதியில போறவங்கள பார்த்து எங்க வீட்டுக்கு வரமாட்டாங்களா எங்கிட்ட பேச மாட்டாங்களான்னு ஏங்கியிருக்கேன் தெரியுமா?
அவுங்க கடந்து போற வரைக்கும் பார்த்துட்டே இருப்பேன்.கடந்து போனதும் ஆழமான வலி ஒன்னு வரும் பாரு.ஏன் வலிக்குதுன்னு தெரியாது.என்ன பண்ணன்னு தெரியாது. கடந்து போனவங்க யாரையும் எனக்குத் தெரியாது.எந்த உறவும் கிடையாது.திரும்பி அவுங்கள நான் பார்ப்பனான்னு கூட கண்டிப்பா தெரியாது ஆனா நான் வருத்ததுல இருப்பேன் அவுங்க நிராகரிச்சதா. அந்த நிராகரிப்பை தாளாம சில நேரம் அழுதுடுவேன்.(இதை நகுலன் கூட ஒரு கவிதையா எழுதியிருப்பார்).

நான் பொய்சொல்லல. ஆனா இந்த உண்மை ஏன் எனக்கு மட்டும் நடக்குதுன்னு விளங்கினதே இல்லை. யார்கிட்டயும் சொல்றதும் இல்லை. பயமா இருக்கும்.
இப்ப வாவது எழுதறேன். 5-6 வயசுல என்ன பண்ணிட முடியும். ஆனா அப்பவே ரொம்ப யோசனைகள் வரும். நான் கைதவறி எதையும் போட்டு உடைச்சிட்டா அம்மாவோ அப்பாவோ அடிச்சாங்கன்னா ஏன் இவுங்களுக்கு புரியல. நான் ஒன்னும் தெரிஞ்சு பண்ணலையேன்னு. பண்ணனும் நினைச்சதில்லையே. இதை புரிஞ்சிக்காம அடிக்கிறாங்களேன்னு.

ஒரு குற்றம் நிகழ்கிறது.நீ காரணமாகுற. குற்ற உணர்வு உன்னை தின்னுது. உம்மேல நம்பிக்கை வெச்சு உனக்கு ஆறுதலா பேச வேண்டிய பெத்தவங்க ஏன் தப்பு செஞ்சன்னு அடிச்சா எப்படி அவுங்க பக்கதுல போகத்தோணும். இந்த மாதிரி யோசனைகளால அவுங்க கிட்டயிருந்து விலகியே இருப்பேன்.அப்ப எல்லாம் திண்ணைக்கு ஓடி வந்து உட்கார்ந்துடுவேன்.திண்ணை காட்டும் வீதியும் வானமும் அப்புறம் என்னை மிகவும் கவர்ந்த அந்தத் தூணும் என்னை பத்திரப்படுத்தும்.

எப்பவாவது உறவுகள் யாரும் வந்து என்னை கொஞ்சினா எவ்ளோ சந்தோசமா இருக்கும் தெரியுமா.வீடு அப்படியில்லை. வீடு பெரும்பாலும் கோடுகளால நிறைஞ்சது.கொஞ்சம் திரும்பினாலும் சில கோடுகள் அழிஞ்சிடும்.உன்னை காட்டிக்கொடுத்துடும். சற்று முன் இல்லை ஆனா இப்ப இனி நீ குற்றவாளி.இன்னைக்கு வீடு தன் இயல்பை அடையப்போறதில்லை.இயல்பை விட கொடிய மௌனம் வரப்போகிறது. அதற்கு நீ தான் காரணம்னு நினைக்கும் போது இன்னும் பலமடங்கு வருத்தம் வந்துசேரும். அதோடு அது நின்னுட போறதில்ல.தவறு மீண்டும் மீண்டும் சுட்டிக்ககாட்டப்படும்.தொடர்ந்து .அந்த குற்றம் என் அடையாளமாக்கப்படும். எல்லா பொழுதுலையும் எனக்கான ஆறுதல் அந்த திண்ணையும் தூணும் தான்.அதன் மேல தலைசாச்சிக்கலாம்.தலை சாய அம்மா மடி அனுமதி எப்பவும் மறுக்கப்படும் பொழுது ஒருத்தனுக்கு எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளும் அந்த மரத்துண்டின் ஆதூரம் இயற்கையின் அரவணைப்பா மிக ஆறுதலா இருக்கும்.

இப்பக்கூட சில தினங்களுக்கு முன்ன அந்த திண்ணைத்தூணை தேடினேன். ஆமாம்.நானோ என் அன்போ என் கண்ணீரோ நிராகரிக்கப்படும் போதெல்லாம் அதே தூணை தான் தேடி சாஞ்சிக்கிறேன் மனசுலயே.
உண்மையான கண்ணீர் மதிப்பளிக்கப்படும்னும் நமக்கு பிடிச்சவங்க அதை உணருவாங்க ன்னும் நினைச்சி நினைச்சி ஏமாந்து அந்த நம்பிக்கை மொதமொதல்ல உடைஞ்சது அங்க தான்.அழுது அழுது காய்ந்த கண்ணீரின் சுவடுகள் ஏற்படுத்தும் வரிகள் அந்த நிராகரிப்பின் அடையாளமாகி இனி அழுது என்னன்னு யோச்சிச்சி அந்த வெறுமையோட (வெறுமைன்னு அப்ப தெரியாது) முகத்தை கழுவிட்டு போய் சாப்பிட உட்கார்ந்த அதே பால்யம் தான் இன்னும் தொடருதோன்னு தோனது.ஆனா நல்லாபசிக்கும் அந்த மாதிரி பொழுதுல.மத்தவங்க மாதிரி சாப்பிடமுடியாம இருந்ததில்லை எந்த வருத்ததிலையும்.இந்த பழக்கத்தால தான் என்னால பலபேர காதலிக்க முடிஞ்சதோ.எல்லா காதலும் தோற்றும் இன்னும் தேடல் தொடரமுடியுதோ என்னமோ.

பக்கத்து வீட்டு உறவுகளுடன் மட்டும் அனுமதிக்கப்பட்ட ஓரு குழந்தை யின் மிகப்பெரிய - ஒரே மைதானம் அந்த திண்ணை தான். சண்டைபோட்ட வீடுகளா இருந்தாலும் திண்ணையும் குழந்தைகளும் சேர்ந்துதான் இருக்கும்.பெத்தவங்களுங்கு முக்கியமா படுற எதுவும் குழந்தைகளை பாதிக்கிறதில்லை. குழந்தைகளின் முக்கியங்களை பெத்தவங்க நெருங்குறதில்லை.

எப்பவாவது தான் மழைவரும் எங்க ஊர்ல.அப்ப அந்தத்தூண் பக்கத்துல உட்கார்ந்துட்டு உடல்முழுக்க சாரல் அடிக்கும் பொழுது உலகத்தின் மொத்த சந்தோசத்தையும் எனக்கே எனக்கா பரிசளிப்பதாக நெனச்சு கைவிரித்து மழையை தீண்டுவேன்.ஆனா அதுவும் நீண்ட நேரம் நீடிச்சதில்லை. மழையில நெனஞ்சா காய்ச்சல் வரும். வீட்டுக்கு உள்ள போயிறனும் உடனடியா எந்த எதிர்ப்பும் காட்டாம. எனக்கும் எந்த எதிர்ப்பும் காட்டி பழக்கமில்லை. ஏத்துக்க வேண்டியது தான்.அப்புறம் தனியாக வந்து அழுதுக்கலாம்.
மழைக்கு வீட்டு கதவுகள் சாத்தப்படும்.

நல்ல வேளையாக கூரை வீடுகளுக்கு மழை சப்தத்தையும் இடிசத்ததையும் அன்னியப்படுத்த இயலாது. மனதில் மழை பெய்ய தொடங்கியது அப்படி தான்.ஏகாந்தம் உணரத்தொடங்கியதும் அப்படி தான்.அதிகம் மௌனமானதும் அப்படித்தான். மனதளவில் திண்ணைத்தூண் அருகில் சாய்ந்து மழையில் கால் கை நினைத்து பின் முகம் நினைத்து மழை நிரம்பி வழியும் நொடிகளில் படர்ந்த வெண்திரையில் கடந்து செல்லும் வாகணங்களின் அழகு மனிதர்களின் அவசரம்.குழந்தைகளின் மௌனமான சந்தோசம். ஆமாம். நிறைய குழந்தைகள் மௌனமாகத்தான் தன் சந்தோசத்தை அனுபவிக்குது.

இப்ப வளரும் என்னைப்போல குழந்தைகளுக்கு திண்ணையோ தூண்களோ பெரும்பாலும் கிடைக்கிறதில்லை.கிடைக்கப்போறதுமில்லை.அப்படி ஒன்னு இருக்குன்னு இருந்ததுன்னு கூட தெரியாது. ஆனாலும் எனக்கு இப்ப எழுத்து மூலமா வாழ்க்கையின் அழுத்தங்கள்ல இருந்து தப்பிக்க முடியும் னு தெரிஞ்ச மாதிரி அந்த சின்னபையனுக்கு சற்றே கரடுமுரடாண அந்த திண்ணைதூன் தெரிஞ்சிருக்கு. திண்ணைத்தூண் இல்லாத குழந்தைகளுக்கு வேற எதையோ காலம் விரல் நீட்டி காட்டியிருக்கலாம். அதுகளும் அதுல சாய்ந்திருக்கலாம்.

இந்த உலகத்துல இரண்டு வகையான மனிதர்கள் இருக்காங்க.ஒன்னு அன்பை தேக்கி வெச்சி வீணாக்குறவங்க. இன்னொன்னு அன்புக்காக ஏங்கி ஏங்கி சாகுறவங்க.இந்த இருவரும் பெரும்பாலும் சந்திக்கிறதேயில்லை.சந்திக்கும் பொழுது அன்பை பற்றி பேசிக்கிறதில்லை.

இந்த பெத்தவங்க மட்டும் கொஞ்சம் அன்பை அப்ப அப்ப பகிர்ந்துட்டா எப்படி இருக்கும்.

13 :பின்னூட்டங்கள்:

சுபஸ்ரீ இராகவன் May 28, 2009 at 5:12 PM  

மனதை தொட்ட வரிகள்

நான் இந்த உலகத்தின் காதை நெருங்குறேன். ரகசியம் பேச. என்னால இனியும் தனியா பேச முடியாது.

பெத்தவங்களுங்கு முக்கியமா படுற எதுவும் குழந்தைகளை பாதிக்கிறதில்லை. குழந்தைகளின் முக்கியங்களை பெத்தவங்க நெருங்குறதில்லை.

திண்ணைத்தூண் இல்லாத குழந்தைகளுக்கு வேற எதையோ காலம் விரல் நீட்டி காட்டியிருக்கலாம். அதுகளும் அதுல சாய்ந்திருக்கலாம்

மேலும் வளர வாழ்த்துக்கள் !!!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் May 28, 2009 at 6:58 PM  

//இந்த உலகத்துல இரண்டு வகையான மனிதர்கள் இருக்காங்க.ஒன்னு அன்பை தேக்கி வெச்சி வீணாக்குறவங்க. இன்னொன்னு அன்புக்காக ஏங்கி ஏங்கி சாகுறவங்க.இந்த இருவரும் பெரும்பாலும் சந்திக்கிறதேயில்லை.சந்திக்கும் பொழுது அன்பை பற்றி பேசிக்கிறதில்லை.
//

உண்மைதான்.


மிக ஆழமான கருத்தைச் சொல்லியிருக்கீங்க. நம்மால முடிஞ்சது, நமக்குத் தப்புன்னு தோன்றத நாமாவது செய்யாம இருக்கறதுதான்.

-ப்ரியமுடன்
சேரல்

ஆயில்யன் May 28, 2009 at 10:07 PM  

//எப்பவாவது தான் மழைவரும் எங்க ஊர்ல.அப்ப அந்தத்தூண் பக்கதுல உட்கார்ந்துட்டு உடல்முழுக்க சாரல் அடிக்கும் பொழுது உலகத்தின் மொத்த சந்தோசத்தையும் எனக்கே எனக்கா பரிசளிப்பாதாக நெனச்சி கைவிரித்து மழையை தீண்டுவேன்.///

என்னை மறந்த கணங்களாய் ஒவ்வொரு மழைப்பொழுதிலும் மிக உற்சாகமாய் அனுபவித்த அந்த நாட்களை மீள செய்தது !

பால்ய வயதில் எல்லோருக்கும் இருக்கும் ஆசை அனைவரும் தம் வீட்டிற்கு வந்திருந்து குதூகலமாய் இருக்கவேண்டும் என்பதே ஆனால் அதிகம் சாத்தியமாகாத ஆசை ! :)

M.Rishan Shareef May 29, 2009 at 4:15 AM  

வியக்கவைக்கிறாய் நண்பா !

அழகான நடை..அருமையான வரிகள்..அனுபவத்தில் வந்த சிந்தனையோட்டம் அவ்வளவும் உண்மை.

திண்ணைக்கும் பால்யத்துக்கும் மிக அதிகளவான நெருக்கம் உண்டுதான். விளையாடிக் கழித்த திண்ணைப் பொழுதுகள் இப்பொழுது நினைவின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டே இருக்கின்றன.

//இந்த உலகத்துல இரண்டு வகையான மனிதர்கள் இருக்காங்க.ஒன்னு அன்பை தேக்கி வெச்சி வீணாக்குறவங்க. இன்னொன்னு அன்புக்காக ஏங்கி ஏங்கி சாகுறவங்க.இந்த இருவரும் பெரும்பாலும் சந்திக்கிறதேயில்லை.சந்திக்கும் பொழுது அன்பை பற்றி பேசிக்கிறதில்லை.//

:)

இந்தப் புன்னகைக்கு அர்த்தம் உனக்குப் புரியும் :)

நந்தாகுமாரன் May 29, 2009 at 9:59 AM  

beautiful expression

இராவணன் May 29, 2009 at 10:07 AM  

மிக நன்றிங்க சேரல்

ஆயில்யன் - முதல் வரவுக்கு நன்றி

ரிஷான் - ;)

நந்தா - மிக நன்றிங்க.

யாத்ரா May 29, 2009 at 12:22 PM  

நீங்க எழுதின ஒவ்வொரு வரிகளிலும் நான் வாழ்ந்து வந்தேன் இராவணா, எனக்கு எங்கயுமே எழுதினதை வாசிக்கறோம் என்ற உணர்வே இல்ல, முழுமையா வரிகள் விரிகிற காட்சிகளோட மனநிலையோட முழுவதுமா கரைஞ்சி போயிட்டேன்பா.

இரவு தூங்குறதுக்கு முன்னாடி துப்படிய இழுத்து போத்திகிட்டு உள்ள அழுவேன் சின்ன வயசில, இப்பவும் சில நேரங்கள்ல, ரோட்ல யாருன்னே தெரியாதவங்களல்லாம் சித்தப்பா, பெரியப்பா ன்னு கூப்டு கிட்டிருப்பேன்.

தூணை புடிச்சி, சுத்தியிருக்சீங்களா.உங்க தூண், ஐயோ என்னால இந்த பதிவுல இருக்க அன்பு தாங்க முடியலப்பா.

எனக்கு இதைப்பத்தி நிறைய எழுதனும் போல இருக்கு,நம்ப இதைப்பத்தி நிறைய பேசுவோம்,

நீங்க இப்படி தொடர்ச்சியா தூண் மாதிரியான விஷயங்களை எழுதனும், உணர்வும் அத உணர்ற மனசும் அப்படியே காட்சியா எழுதிக்கிட்டே போறீங்க ரொம்ப அருமையா. தயவு செய்து தொடரவும்.

ச.பிரேம்குமார் May 30, 2009 at 12:20 AM  

ரொம்பவே கனமான கட்டுரையாக இருந்தது. தனிமை கவ்வும் நேரங்களில் எல்லாம் இதை ஒரு முறை எடுத்து படித்து கொள்ளலாம்

ரகசிய சிநேகிதி May 30, 2009 at 1:18 AM  

திண்ணைத்தூண் பூரணத்துவம் பெறுகிறது உனது உணர்வுகளோடு...
நல்லதோர் படைப்பு....
நாளும் வளர என் வாழ்த்துகள்...

"திண்ணைத்தூண் இல்லாத குழந்தைகளுக்கு வேற எதையோ காலம் விரல் நீட்டி காட்டியிருக்கலாம்."

பிடித்திருக்கிறது இந்த வரிகளின் உண்மை

இராவணன் May 30, 2009 at 7:50 AM  

யாத்ரா - உங்கள் வார்த்தை்களின் உண்மையை உணரமுடிகி்றது முழுமையாய்

பிரேம் குமார் - நன்றி நண்பா
ரகசிய சிநேகிதி - நன்றி தோழி

விழியன் May 30, 2009 at 8:08 AM  

ஆழமான வரிகள்.

பிரவின்ஸ்கா May 31, 2009 at 4:41 AM  

// நல்ல வேளையாக கூரை வீடுகளுக்கு மழை சப்தத்தையும் இடிசத்ததையும் அன்னியப்படுத்த இயலாது. மனதில் மழை பெய்ய தொடங்கியது அப்படி தான்.ஏகாந்தம் உணரத்தொடங்கியதும் அப்படி தான்.அதிகம் மௌனமானதும் அப்படித்தான். மனதளவில் திண்ணைத்தூண் அருகில் சாய்ந்து மழையில் கால் கை நினைத்து பின் முகம் நினைத்து மழை நிரம்பி வழியும் நொடிகளில் படர்ந்த வெண்திரையில் கடந்து செல்லும் வாகணங்களின் அழகு மனிதர்களின் அவசரம்.குழந்தைகளின் மௌனமான சந்தோசம். ஆமாம். நிறைய குழந்தைகள் மௌனமாகத்தான் தன் சந்தோசத்தை அனுபவிக்குது. //

ஆமாங்க. இப்படித்தான் இருக்காங்க .

ரொம்ப நல்லா இருக்குங்க.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

.

உயிரோடை May 31, 2009 at 9:59 PM  

ல‌ஷ்ம‌ண் அன்புக்காக‌ ஏங்க‌ற‌தை விட்டுட்டு, அன்பை கொட்டி பாருங்க‌. அன்பு ஒரு ப‌ந்து போல‌ நீங்க‌ எவ்வ‌ள‌வு வேக‌ அதை அடிக்கிறீங்க‌ளோ அவ்வள‌வு வேக‌ உங்க‌ட்ட‌ வ‌ந்து சேரும்.

ப‌திவு ரொம்ப‌ ந‌ல்லா இருந்த‌து. வார்த்தைக‌ளும் நேர‌மும் குறைவு.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP