இப்பொழுதெல்லாம்

இப்பொழுதெல்லாம்
விடியல்
என் வாயிலுக்கு
பிச்சைப்பாத்திரத்தோடு
அந்தக்குழந்தையை
அனுப்பிவைக்கிறது
ஏக்கம் தோய்ந்த பார்வையோடும்

பழங்களையும்
சில கிழமைகளில் என் மதுவையும்
பகிர்ந்தளித்தேன்

இன்று
இவையெதிலும்
அந்தப்பாத்திரம்
நிறம்பவில்லை

ஏக்கம் தோய்ந்த
அந்த முகத்தை
எதிர்கொள்ளவியலாது தகிக்கிறேன்

என் விரல்களால்
மெதுவாய்
நஞ்சின் ஒரு துளியை
கலந்தளிக்கிறேன்

மதுவின் மாறிய வண்ணத்தில்
முகம் மலர்ந்த குழந்தை
மதுவருந்தி விலகியது

நாளைய விடியலில்
மீண்டும் வரலாம்

அந்தப்பாத்திரம்
அந்தப்பார்வை
இரத்தம் வழிந்த அதன் உதடுகள்

இப்பொழுதெல்லாம்
இரவை விட
விடியலை எதிர்கொள்வது
கடினமாய் இருக்கிறது

Read more...

தனித்த இரவுகள்

பாம்புகள் இரண்டு
என் போர்வையின்
மேல்
புணர்ந்து கொண்டிருக்கிறது

பயம் கொண்ட
உயிர்
மெல்லக்கசிந்து வெளியேறி
அறையின்
மூலையில் மௌனமாய்
தனித்து அமர்ந்திருக்கிறது

கனவின்
நிர்வாணப்பெண்
என் உடலை
பிணமென
உமிழ்ந்து
தனைக்கலைத்து மறைகிறாள்

இன்னும்
அந்த பாம்புகள்
புணர்ந்துகொண்டுதான் இருக்கிறது
என் போர்வையின்
மேல்

விடியலின்
திசை
ஒட்டடைகளுள்
எங்கோ
அடைந்து கிடக்கிறது

Read more...

மௌனங்கள்

மௌனங்களால்
அறுந்து கிடக்கும்
உயிரில்
கசியும் குருதியை
ஈக்கள் மொய்க்கின்றன
இரவு நேரங்களில்
நாய்களும்

இந்தப்பொழுதின்
மென் காற்றில்
வண்ணங்கள் தூவி
மிதந்துகொண்டிருக்கிறது
ஒரு நீர்க்குமிழி
எந்த நொடியும்
உடையக்கூடிய சாத்தியங்களோடு

Read more...

ஒரு புன்னகை

உடன் பகிர்ந்து விட
இயலாத ஒரு புன்னகை
சிதறி கிடக்கிறது
பூக்களாய்
பிணம் சென்ற
வழியெல்லாம்

வெறும்
அடையாளமாகவும்
தனித்தும்
நிராகரிப்பின் வலியோடும்

எந்த பிரக்ஞையுமற்று
மெல்ல
மேற்கு நோக்கி
நகர்கிறது சூரியன்

Read more...

என் அறையில்





அந்த அறையில்
எறும்பும் புழுவும்
சற்றுமுன் துளிர்த்த ஒரு பூச்செடியும்
கொலையுறும் சப்தம்
எப்பொழுதும்
கேட்டுக்கொண்டிருக்கும்

இரக்கமற்ற பதில்கள்
குரூர விழி திறந்து
இரவுகளில்
உள் உலாவும்
பசியோடும் பல்குத்தும் மரக்கிளையோடும்

வன்புணர்வின் அடையாளங்களோடு
அறை நடுவில்
கிடத்தப்பட்டிருக்கும்
ஓர் குழந்தையின் உடல்

அதிர்வுகளற்ற மெல்லிய
அதன் சுவாசத்தில்
நிரம்பி வழியும்
என்றாவது கேட்கும்
ஒரு தாலாட்டின் நம்பிக்கை

இயல்பாகவே இருக்கிறது
அவ்வப்பொழுது
பிணமென வெளியேறவும்
உயிர்ப்புடன் இருக்க
ஊர்க்கதை மட்டும்
பேசிச் சிரித்துக்கொள்ளவும்

Read more...

ஆண்டவன் கனவு

இரவின் இருளுக்கு பயந்து
கைக்கும் எட்டாத தூரத்தில் ஒளிந்துகொள்கிறது
உறக்கம் நடுக்கத்தோடு
அழைத்தும் வெளி வர மறுத்து

தனிமையின் வெம்மை தாளாது
உலர்ந்து கிடக்கும் நொடிகளை
சுமந்து செல்ல விருப்பமின்றி
கடிகார முள்
மெதுவாய் நகர்கிறது

எல்லாமும் சரியாக இருப்பதான
நினைப்போடு எந்த வித அடிப்படை தொடர்புகளற்ற
நானும் நானின்மையும் இன்னும் சில
எதார்த்தங்களையும் ஒன்று சேர்த்து
கனவொன்றை காணும்
இறைவனுடைய நிகழ்காலத்தின் வலியுணர்ந்து
வருத்தம் கொள்கிறேன்!

பகிர்வுந்தில் (share Auto) என் தொடை உரசி அமர்ந்திருக்கும்
அந்த ஆன்மாவுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை
நான் ஆண் அது பெண் என்பதை தவிற!

Read more...

சந்திப்பு

பயபக்தியுடன்
கோவிலின் கருவறை
உள் நுழைந்தேன்


நேற்றிரவுப்பார்த்த
பிசாசைப்பற்றி
கடவுள் முன்
கூறிக்கொண்டிருந்தேன்
வெளிறிய முகத்துடன்

தானும் தான்
என்ற கடவுளின்
முகமும் வெளிறி இருந்தது

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP