ஒரு பறவை ஒரு கிளை

ஒரு கிளையில்
ஒரு பறவை
வந்தஅமர்ந்து
அன்பைப்
பாடுகிறது

பறவை
கூடுகட்டலாம்
இனி
கிளைப்
பறவையாகி
உடன் பறக்கலாம்

சில
உண்மைகள்

பறவை
கிழக்கில் இருந்து
வந்தது

கிளை
கூடுகளற்றது

Read more...

அன்புற்றிருத்தல்



இந்த மாலைப்பொழுதில்
அழகாகவே இருக்கிறது
சூரியன்
மேகம்
மற்றும் வாழ்க்கை

சொல்ல மறந்துவிட்டேன்
அந்த மீன்கள்
முத்துமிட்டுக்கொண்டன
மணல்வெளி கடலானது

Read more...

வழி தவறிய மீன்கள்

வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை

தத்தம் வழியில்
மரணம் நோக்கி
தொடர்கின்றன

ஒரு கைப்பற்றுதலோ
ஒரு முத்தமோ
நிகழ்ந்திருந்தால்
ஒருவேளை
கடல்
அற்றும்
வாழ்ந்திருக்கக்கூடும்

Read more...

மரணத்தின் வாசனை - அகிலன்



ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்
இந்த மிக எளிமையான வரியில் ஆழம் நிறைந்த வலியை பதிவு செய்திருக்கும் என் சகோவின் (என் சகோதரன் என்று தன்னிச்சையாக நான் அழைக்கும் அகிலனின்) இந்தப்புத்தகத்தை எந்த வித வண்ணத்தின் வழி பரிதாபத்தையும் எதிர்நோக்காத ஒர் ஆவணப்படத்தின் எழுத்துருவாக்கமாகவே உணர்கிறேன்.

மதிப்புரை வழங்கும் அளவிற்கு நான் என்னை உயர்த்திக்கொள்ளாத(சரியான வார்த்தையா தெரியவில்லை) இந்த சூழலிலும், இந்த பதிவை ஒரு வாசகப்பதிவு என்றும் அந்நியப்படுத்த ஏலாது. மேலும் என் சகோவிற்கும் (மற்ற ஈழநண்பர்கள் பலருக்கும்) எனக்கும் இடையில் எளிதில் கடக்க முடியாத எப்பொழுதும் நிறைந்திருக்கும் நிழல்களின் சில அடையாளங்களை அறிய ஏதுவாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.
(இந்த பதிவின் உண்மைத்தன்மை அறிய விரும்புவோர்க்கு ஒரு தகவல். இன்னொரு மரணத்தின் வாயிலில் நானே நேரில் சகோவிடம் கேட்டுப்பெற்ற இந்த புத்தகத்தில் அவர் கையெழுத்திடவும் இல்லை. நான் பணம் தரவுமில்லை)



ஒவ்வொரு பகுதி தொடங்கும் பொழுதும் அந்தப்பகுதியில் முன்னிலை படுத்தப்படும் உயிரின் மரணம் இறுதியில் அறிவிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. மேலும்
போருக்கும் மரணத்திற்குமான தொடர்பும் புதிதல்ல.
ஆயினும் இங்கு எளிமையான ஒரு மனிதனின் அண்ணன் பாட்டி சித்தி தந்தை தோழி காதலி நாய்குட்டி பூனை இன்ன பிற உறவுகளின் / உற்ற உயிர்களின் வாழ்க்கைக்கும் போருக்கும் உள்ள அதீதத்தொலைவும் அந்த தொலைவை மிகச்சில நொடிகளில் வென்றுசெல்லும் செல்களையும் பற்றிய உண்மைகளோடும் தீராத அமைதியோடு அழுகுரல்களையும் பதிவுசெய்திருக்கிறது இந்த புத்தகம்.

குறுக்காசும், பெடியல் மற்றும் ஆமிக்காரர்கள் எல்லாரும் போரின் சாட்சிகளாக வந்துபோகிறார்கள்.அதாவது இங்கு சொல்லப்படும் அனைத்து மரணத்திற்கும் போர் காரணம் எனபதை மட்டும் சொல்லிவிட்டு போருக்கு யார் காரணம் என்ற கேள்வியை காலத்தின் கையிலேயே விட்டுவிட்டுத் தொடரும் இந்த எழுத்துக்களின் மௌனம் நம்மை தடுமாறவே செய்கிறது.

இந்தப்புத்தகத்தில் உள்ளது போல குண்டு விழுந்ததை கூட 'நேற்று இரவு குண்டு விழுந்தது' என்று இயல்பாக எழுத முடியுமா என்பது அதிர்ச்சியாய் தோன்றுகிறது. அகிலனைப்போன்று போருக்கிடையிலே வாழ்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு எழுதமுடியும் என்றும் இது போரின் மிகக்குரூரமான முகம் என்றும் சற்றே நிதானிக்கும் பொழுது அவதானிக்கமுடிகிறது.

அதே நேரம் போர் சூழலிலே பிறந்து வளர்ந்த மனிதனுக்குள்ளும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்பதை பதிவு செய்ய மறக்கவில்லை அகிலன். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பதற்றத்தோடு கேட்டறிந்த 'தந்திரோபாய பின்நகர்வு' என்ற சொற்றொடர் இந்த புத்தகத்தில் பயன்படுத்திய இடத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்ததை மறக்க ஏலாது. மற்றும் 'தொடங்கீற்றான்ரா சிங்கன்'

இந்த புத்தகத்தின் மூலம் ஈழ வாழ்வை நெருங்கிபார்க்க முடிந்தது என்பதில் நிறைவும் அதை வேளை துர்மரணங்கள் ஏற்படுத்தும் வெறுமையும் ஒரே நேரத்தில் உணர்வது சற்றே எதிர்கொள்ள இயலாத கணத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இங்கு மரணத்தின் வாசனை யின் உள்ளீடுகளை அதிகம் பதிவு செய்ய விருப்பமில்லை.அதன் மீதான என் மீ-பார்வைகளை மட்டுமே பதிவுசெய்கிறேன்.மற்றவை படித்து அறியவும்.

மரணத்தின் வாசனை என்ற தலைப்பு முதலில் என்னை அசௌகரியப்படுத்தியது. அதற்கு அகிலன் காரணமல்ல.இங்கே பலவார்த்தைகளை நம் வியாபார நோக்கிற்காக அதன் அர்த்த ஆழங்களை பற்றி சிறிதும் அக்கறையற்று வெறும் உவமையாகவும் ஈர்ப்புக்காகவும் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு முலை,யோனி,மரணம்,ரத்தம்,வெளி,பிரபஞ்சம் இன்னபிற.

ஈழம் குறித்து பலரும் எழுதுகிறோம். அது கேள்வி ஞானத்தால் ஆனது. வாசனை என்பது நேரில் சந்தித்த வாழ்க்கை என்பதன் தெளிவை ஏற்படுத்துகிறது. உண்மையில் இந்த புத்தகம் ஒரு சிறுவனின் வாக்குமூலத்தின் வழி 'மரணத்தின் வாசனை' என்ற இரண்டு வார்த்தைகளின் ஆழத்தை நோக்கி பயணிக்கிறது.


ஈழம்வாழ்வின் பகல் இரவை அறிய எண்ணுபவர்களுக்கு இந்தப்புத்தகம் மிகவும் நெருக்கமானதாக அமையும் என்றே கருதுகிறேன்.

Read more...

சென்னையில் மாபெரும் ஒன்றுகூடல்பெப்ரவரி 22 - 2009 மெரினா கடற்கரை போர்நினைவகம் முதல் காந்திசிலை வரை - இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்

அன்புள்ள நண்பர்களுக்கு,
நிறைய பேசியாயிற்று
நிறைய விவாதித்தாயிற்று
மனிதாபிமானம் பற்றி
தற்கொடைப்பற்றி

தற்கொலையின் முட்டாள்தனம் பற்றி
தற்கொலையின் தியாகம் பற்றி
ராஜீவ் காந்தியின் கொலைப்பற்றி
அதன் துன்பியல் பற்றி
அதன் மர்மங்கள் பற்றி

இந்திய தேச இறையாண்மைப்பற்றி
தடைசெய்யப்பட்ட இயங்கங்கள் பற்றி
அவைகளைப்பற்றிபேசுவதின் சட்ட சிக்கல் பற்றி
அந்த தடையின் நியாயங்கள் பற்றி

அந்த தடையை உடைபதைபற்றி
இனவெறுப்புகள் பற்றி
மனிதக்கேடயங்கள் பற்றி
பாதுகாப்பு வலையம் பற்றி

Cocentration Camp பற்றி
இந்திய தேசிய ஒருமைப்பாடு பற்றி
தமிழ்தேசிய பிரிவினைவாதம் பற்றி
இந்தியனாய் இனைவோம் பற்றி
தமிழனாய் எழுவோம் பற்றி



பயங்கரவாதிகள் பற்றி
விடுதலைப்போராளிகள் பற்றி
மதவெறிகளைப்பற்றி
எல்லாம் கடந்த மனிதநேயம் பற்றி


எல்லாம் கடந்து ஒன்று மட்டும் நிச்சயம்
அங்கே பிணங்கள் குவிவதை யாரும் மறுப்பதற்கில்லை.
இன அழித்தல் நடப்பதை யாரும் அறியாமலில்லை

பிணங்களின் மேல் ஒன்றும் நடக்கவில்லை
என்று சத்தியம் செய்ய நாம் தயாராயில்லை


நேற்று(17- பெப்ரவரி-2009) கொல்லப்பட்ட 104 (50 குழந்தைகள் உள்பட) உயிர்களுக்காய்
இந்த புத்தாண்டில் மட்டும் இறந்த 1700 உயிர்களுக்காய் 4000 மேற்பட்ட படுகாயப்பட்டவர்களுக்காய் இதுவரை 60 ஆண்டுகளின் , இறந்த 70 000 அப்பாவி தமிழர்களுக்காய்

ஒன்று கூடுவோம் ஒரே குரலாய் ஒரே குறிக்கோளோடு
‘போர் நிறுத்தம் வேண்டும் . இனஅழித்தலை நிறுத்த வேண்டும்’

எந்த அரசியல் உள்நோக்கமுமில்லை. எந்த அரசியல் கட்சியுமில்லை
பொதுமக்கள் இனைந்து பொதுமக்களால் நடத்தப்படும் இந்த மாபெரும் அமைதி நடைக்கு ஒன்று கூடுவோம்

இடம்: போர் நினைவகம் தொடங்கி காந்தி சிலை வரை, மெரினா கடற்கரை, சென்னை
நாள் : 22- பெப்ரவரி – 2009 (ஞாயிறு)
நேரம் : மாலை 4 மணி

குடும்பத்தோடு வாருங்கள்.
இந்த அமைதி நடையில் நடக்கும் ஒவ்வொருவராலும் அங்கே ஓர் உயிர் பிழைக்கும்.
2 ½ இலட்சம் அப்பாவித்தமிழர்கள் உங்களை கையேந்தி நிற்கிறார்கள்.

ஓர் இனம் அழியும் பொழுது நடுநிலைமை என்பது மனிதத்தன்மை அல்ல
ஒன்று படுவோம் இன அழித்தலைத் தடுப்போம்



இலக்குவண்
இனஅழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்
www.indiansagainstgenocide.org

Read more...

பின்பனிக்காலம் ,100 அடி சாலை, காலை ஒன்பது மணி

உலகெலாம்
உடல்கலாயின

அடைப்புக்குறிகளாய்
ஆடைகள்

முத்தம் தூண்டும்
இதழ்கள்

வழி நெடுகும்
முலைகள்
மெட்டிகள்
மி்கச்சில முகங்கள்

உயிர் கூச
இமைகளை மூடி
கண்களை
புதைக்கிறேன்
நினைவுத்தூண்களில்
கோயில் சிலைகள்
வழிபட யாருமற்று
வளரத்துவங்குகிறது
கடவுளின் அழகியலோடு
லிங்கம் ஒன்று


நீயற்ற பொழுதில்
உலகமெல்லாம்
வெறும்
உடல்கலாயின

Read more...

என்னால் இயன்றது

நிச்சயமாக சொல்லமுடியும்
தொடரும் செல்(cell) லடி சப்தம்
தாளாது அழும் கைக்குழந்தைக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
எந்த நாடும்
எந்த இயக்கமும்
முக்கியமாக
எந்த மொழியும்


எம் இறையாண்மையை
பாதுகாக்கும் பொருட்டு
என்னால் இயன்றது
இனி இந்த
உறக்கமற்ற இரவில்
பரத்தையின் முலையை
நகங்களால்
காயப்படுத்த மட்டுமே

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP