எழுத்து என்பது?
எழுத்து என்பது மிகவும் சக்தி வாய்ந்தது(எவ்வளவோ முறை யார் யாருடேய வாயிலோ எழுத்திலோ பட்டு தன்னை தன் சக்தியை இழந்த ஒரு சக்திவாய்ந்த வாக்கியம்).அந்த எழுத்தின் மூலம் நான் அவனை பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறேன்.அவன் யார்?அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவனைப்பற்றி நீங்கள் தெரிந்து என்ன ஆகப்போகிறது? ஏன் நான் உங்களை பற்றி எழுதக்கூடாது? நீங்கள் கேட்பது என் காதுகளை துளைக்கிறது.நீங்கள் கேட்பதாக நான் நினைப்பது.
உங்களை பற்றி எழுதலாம் தான்.உங்களை பற்றி எனக்கு என்ன தெரியும்?.ஒன்றும் தெரியாது.கற்பனை செய்யலாம்.உங்களை பற்றி கற்பனை செய்வது எனக்கொன்றும் அசௌகரியம் இல்லை.ஆனால் உண்மையோடு என் கற்பனையை சேர்ப்பது பாலில் நீரை அதிகம் சேர்ப்பது போல், உங்களின் கோடுகளுக்குள் நான் பயணிப்பதைப்போல,ஒரு வகையில் எளிதில் நீர்த்துவிடலாம்.பயனற்றும் போகலாம்.
Simlpy my Legs may not fit your shoes
உங்களுக்கு இப்பொழுது நான் ஆதவனையோ சு.ராவையோ பிரதிபலிப்பது போல தோன்றலாம்.அது உண்மைதான்.அவர்களின் எழுத்துக்கள் எனக்குள் எழுப்பும் சப்தங்களைத்தான் வரைகிறேன்.எழுத்தாக்குகிறேன்.ஆதி மனிதன் தன் மௌனத்தை இழந்து அல்லது உடைத்து தருணத்தில் சப்தத்தை உருவாக்கியது போல.பின் மொழியை உருவாக்கியதைப்போல.மிக இயற்கையாக.
அடுத்து நீங்கள் உங்கள் எழுத்தோடு என் எழுத்தை ஒப்பீடு செய்யலாம்.நான் தடுக்கவில்லை.அது தேவையற்றது.நான் எப்பொழுதுமே உங்கள் எழுத்துக்களால் பிரமிப்படைந்ததில்லை.தவறி நடந்தால், நான் உங்களை என் குருவாக ஏற்று விடுவேன்.ஆம் எந்த காரணம் கொண்டும் என் சகபயணியிடமிருந்து வெகுதூரத்தில் தான் நான் இருக்கிறேன்.அந்த தொலைவும் என் தனிமையும் எனக்கு வசதியானது.உங்களை ஆச்சர்யப்படவோ பயங்கொள்ளவோ செய்ய எளிதானது.நீங்கள் விமர்சிக்க அஞ்சலாம்.அப்படியே விமர்சித்திருந்தாலும் அது அந்த தொலைவைக்கடந்து என்னை சேரும் பொழுது தன் சக்தியை இழந்திருக்கும் இல்லை உருமாறி இருக்கும்.ஆயிரம் ஆண்டுகள் கடந்த கலாசாரம் இப்பொழுது நம்கையில் வெறும் அநுமானங்களாய் இருப்பது போல.(மரத்தில் கயிறு கட்டினால் கல்யாணம் ஆகும். குழந்தை கூட பிறக்கும்).வேற்றுமொழி சொற்களை தமிழ் எழுத்துகளால் எழுதுவதுபோல.தமிழ் சொல்லாகவே அது ஆகிவிட்டதைப்போல.எவ்வளவு தவறு அது.
ஒரு மொழியின் சொல்லை மற்றொரு மொழியின் சொல்லாக பிறருக்கு அறிமுகம் செய்வது.
இதை அறியாத அடுத்த தலைமுறை அந்த சொற்களை தமிழென பாவித்து இலக்கணத்திற்கு முரணாக இருப்பதால் குழம்புவது.நகர வாழ்கையில் பொங்கல் கொண்டாடுவதைப்போல(இந்த வருடம் கரும்பு ரொம்ப costly இல்ல).
எழுத்துமொழி அற்ற வடமொழிக்கான நியாயங்கள் இல்லாத பொழுதும் ஆங்கிலம்,hindi இன்னபிற மொழியின் வார்த்தைகள் தமிழாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டன (உங்களை தொடர்ந்து நானும் எழுத்துலகத்திற்குள் வருவதைப்போல என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்).அவ்வாறு எழுதுபவர்கள் தன்னை வாசிப்பவர்கள் வேற்று மொழியின் வார்த்தைகள் அறிந்தால் போதும் மொழி அறிய அவசியமில்லை (பல மொழிகள் இருக்கும் இந்த நாட்டில்) என்பதை ஒரு வசதியாகவும் பின் வழக்கமாக ஆக்கிவிட்டார்கள்.
இதை பற்றி எனக்கென்ன கவலை.என்னைப்படிப்பவர்கள் நான் எழுதும் மொழிகளை தெரிந்து வரட்டுமே.வருவார்கள்.அவ்வளவு நம்பிக்கையா எனக்கு?.தெரிந்து வருவார்கள் என்று நான் அநுமானிக்கிறேன்.
ஆம்.கதையோ கவிதையோ கட்டுரையோ எழுதுவதற்கு இவ்வளவு அநுமானம் தேவைப்படுகிறது.அதுவும் மொழி அளவில்.கருத்தளவில் இன்னும் பல இருக்கின்றன.
அன்னையென்றால் பாசம்.தந்தையென்றால் கண்டிப்பு.பெண் என்றால் கற்புக்கரசி.புரட்சி செய்ய நினைத்து இந்த அநுமானங்களை உடைக்கலாம்.இதையும் கூட அநுமானிக்க வேண்டும்.எந்த வார்த்தையைக்கொண்டு பழைய அநுமானங்களை உடைப்பது என்று.எந்த வார்த்தை எந்த எழுத்துக்களின் தொகுப்பு வாசகனை அவன் அநுமானங்கள் உடைவதை அதிர்ச்சியோடு நோக்கச்செய்யும் என்பது குறித்து.
இவ்வளவு யோசித்து பின் எதை எழுதுவது. யோசித்ததையா?. அது வார்த்தைகளின் இருண்ட கூடாரம் போல.இந்த வார்த்தைக்கு இத்தனை எழுத்து என்பதைப்போல.காதல் தோல்விக்கு தாடி வளர்ப்பதைப்போல.ஓரு வழமை.ஒரு கட்டாயம்.
Artist should follow his instinct and not the rules.
நான் எழுத நினைத்ததை நினைப்பதை எழுத முயல்கிறேன்.அந்த நொடியின் உண்மையென நினைப்பதை. ஆழந்து யோசித்து கலைக்குள் அறிவியலை வேதியல் தொடங்கி எல்லா இயல்களையும் புகுத்தாமல்.மனிதனை மனிதனாக.மற்றுமொரு விலங்காக எழுத முயல்கிறேன்(விலங்கு என்பது குரூரமான என்பதற்று உண்மையான என்பதாக).
அதனால் தான் நான் உங்களை பற்றி அல்லாது அவனைப்பற்ற என்னைப்பற்றி எழுதுயிருக்கிறேன்.(ஆம் அவன் என்று சொன்னது என்னைப்பற்றிதான் என்பதை நீங்கள் முன்பே அநுமானித்திருந்தால் மகிழ்ச்சி)
"எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்கி
ன்
ற
ன
அவைகளைத்
துடைத்தெரிய வேண்டும்
வேண்டும்"
--நகுலன்