பாலையின் சுவடுகள் என் மனதில்

அன்புள்ள தேவதைக்கு,

உன் பிரிவின் வலியை கூற விழைந்து எங்கேனும் உன்னை கொலை செய்யும் முயற்சி ஆகிடுமோ என்ற பயத்தோடு இப்படி மௌனம் காக்கிறேன்..

உன்னை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பதில்லை. இருந்தும் என்னொடு ஏதோ ஒரு வழியில் உன் பிரிவு வந்துகொண்டுதான் இருக்கிறது.

சற்றே கண்ணுறும் பொழுது ஒரு மௌனமான வலி ஒன்று வெயில் நுழையும் இருள் போல உயிர் நுழைந்து கிழிக்கிறது என் இருப்பை.

கழுத்தில், கன்னத்தில் ,இதயத்தின் ஓரத்தில் ,கால்களில், இறுகும் நெற்றியில் எல்லாமும் நிகழ்கிறது ஒரு வலியின் கண்ணீருக்குறிய தேடல்.

உன் இறுதி வார்த்தைகளும் இந்த நீண்ட மௌனமும் மனதில் எதிரொலியென மீண்டும் மீண்டும் வருகிறது. அதிர்வுகள் நிற்காமல்.

வாழ்கை உனக்கும் எனக்கும் அனைத்தையும் கற்று தந்துகொண்டே இருக்கிறது.அதனால் என் விளக்கம் எதுவும் உனக்கும் உன் விளக்கம் எனக்கும் தேவையில்லை என்று இருவருக்கும் தெரியும்.
இருப்பினும் பல நேரங்களில் எனக்கும் சில நேரங்களில் உனக்கும் ஒரு ஆறுதல் தேவைபடுவது நம் உறவின் இருப்பும் அதன் தேவையுமாய் உணர்கிறேன்.

'நாம் ஆண்டவனின், அவன் வழியில், மிகவும் நேசிக்கபடும் குழந்தைகள்..நாமும் அவனை நேசித்துகொண்டே இருப்போம் நம் வழியில்'

வார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும் அனுபவம்தானே தீர்மானிக்கின்றன. நிறைய எழுதவேண்டும்..அதிகம் பேசவேண்டும்..

அந்த பார்வை.சிறு புன்னகை.இறுதியாக எப்பொழுது..தெரியவில்லை...ஏதோ ஒரு விபத்தில்... இனி எப்பொழுது...விபத்தோ..வினையோ..விதியோ...

ஒன்றுமட்டும் நிச்சயம். இந்த மடல் முழுதும் உனக்கு தெரியாத எதையும் பதிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறதே எப்பொழுதும் போல்.

Read more...

குழலோசை

உணர்ச்சிகள் உள்மறைக்கும்
மரங்கள் சூழந்த
காட்டினிடை
உயிரறும் ஓசையெழுப்பி
உருண்டுக்கொண்டிருக்கும
ஓர் மூங்கிலின் எச்சம்
மொழிப்பெயர்க்கிறது
யாருமற்ற நதிக்கரையில்
நிலையென நிற்க
முயற்சித்து நிதம் தோற்று தள்ளாடும்
ஓர் ஓடத்தின் தடுமாற்றத்தை!

தடுத்திருக்க இயலாதுதான்
இருந்தும்
ஒருமுறையேனும்
ஓடமென உருக்கொள்ளும் முன்
சிந்தித்திருக்கலாம்
குறைந்தபட்சம்
விருப்பமற்ற இயல்பான வலிகளை
எதார்த்தமென
ஏற்று மௌனித்திருக்கவும்
அந்தியின் தனித்த குழலோசையொத்த
கழிவிரக்கங்களை தவிற்கவும்

Read more...

வேண்டுதல்களின் பயன்

மௌனமாய்
கண்கள் மூடுகின்றேன்
உயர்கின்றன ஏக்கத்துடன் ஆயிரம் கரங்கள்
மெல்லிய அசைவுகளுடன் உதடுகள்
திசையெங்கும் வேண்டுதல்களின் சப்தம்

எதிரொலியால் அமைதியிழந்து
விழித் திறக்கின்றேன்
தனிமையைத் தவிர
அங்கு ஏதுமில்லை
கோயிலும் கடவுளும் கூட

கையறுநிலையின் சாட்சியென
வெளியேறிய
விழிநீர்த்துளி
ஒன்றில் மிதக்கின்றன
அந்த ஆயிரம் கரங்கள்

உள்பரவுகிறது ஓர் அமைதி
பிரகாரத்தின் வெயில் போல
மெதுவாய்

இனி
நாட்குறிப்பை மூடிவைத்து
உறங்கலாம

Read more...

வாழ்க்கை

நேரம் காலம்
கண்ணியம்
ஏதும் பாராமல்
தன் கழிவை
தோளில் இட்டு
செல்லும்
காகம்!

Read more...

குணம்

நாயிலிருந்து
பன்றியாக
வால் வளைந்ததை
எண்ணி வருத்தம் கொண்டாலும்
காளையாகி நீண்டதும் மகிழ்ந்தது
பின் குதிரையாகி
யானையாகி
இன்ன பிற விலங்கினமென
தான் மாறி கொண்டிருக்கும்
பொழுதின்
ஓர் ஓய்வுநாளில்
ஆதியில்
வாலில்லாமல்
எப்படி வாழ்ந்தோம்
எண்ணி
ஆச்சரியப்பட்ட
அது ‘அது’வல்ல

Read more...

பருவங்கள்

கசக்கியெறியப்பட்ட
அந்த தேதியை
மெதுவாய்
பிரித்து பார்க்கிறது
பிஞ்சு விரல்கள்

உள்ளிருக்கும்
நிகழ்வுகளின் குரூரங்கள்
நினைவில் வர
பயந்துப்
பதறி தடுக்க முனைந்தேன்

சிறு கோடுகள்
சில எண்கள்
ஒரு மகிழ்ச்சி
குழந்தையின் கண்களில்
வேறெதுவும் புலப்படவில்லை

வாழ்வியல் எதார்த்தமென
கடந்த காலத்தில்
மற்றொரு துர்நாளில்
அந்த குழந்தை
கசக்கி எறியப்பட்டது
இந்தத் தேதியைப்போல
என்னிலிருந்து

Read more...

நகுலனை-என் நண்பனை-மொழிப்பெயர்த்தல்

இந்தத் தலைப்பைப் பார்த்து என்னைப்பற்றிய உன் பிம்மங்களை நீ உயர்த்திக்கொள்ளலாம் இல்லை மிகவும் தாழத்திக்கொள்ளலாம் அல்லது இருக்கும் எல்லா பிம்மங்களை உடைத்து புதிதாய் ஒன்றையும் உருவாக்கலாம்.அது உன்னைப்பொறுத்தது.அதில் எனக்கு அக்கறை இருந்தாலும் கவலையில்லை
'என்னைத் துரத்திக்கொண்டு
நான் செல்கிறேன்
எல்லோரும் சிரிக்கிறார்கள்'என்ற என் நண்பனின் (நகுலனின்) வாக்கை வாழ்த்தென நினைத்துக்கொண்டு என்னைத்தொடர்கிறேன். சிரிப்பதோ சிந்திப்பதோ எப்பொழுதும் பின்விளைவுகள் வாழ்வின் மிக சிக்கலான இரகசியம்.

நான் நகுலனை அவனுக்கான இரங்கல் கடிதங்களில் தான் முதலில் சந்தித்தேன்.அது மிகப்பெரிய மகிழச்சியையும் வருத்ததையும் ஒரு சேரத்தந்து இறந்த வீட்டில் எல்லா உறவுகளையும் எதிர் பாராமல் சந்தித்த சிறு பிள்ளையைப் போல் விழி பிதுங்கி நிற்கச்செய்தது.பின் என் இலக்கிய நண்பியின் வார்த்தைகளில் அவனை சற்றே முழுமையாக உருக்கொண்டேன்.அதாவது 'நகுலனின்
கவிதைகள் ஒரு வடிகால்' என்ற அவள் வார்த்தை அவனை என்னுள் உணரச்செய்தது.
நேற்று அவனுடைய 'நகுலனின் கவிதைகள்' (காவ்யா பதப்பகம்)" அவனை எனக்கு நண்பனாக்கியது. இனி அவனை அவன் கவிதைகளை என் வாழ்வியல் வழி மொழிப்பெயர்க்க முயற்சிக்கிறேன்.

மனம் இருப்பின் உடன் வா.உன்னை அழைத்துக்கொண்டு செல்லும் என் விருப்பம் பின்குறிப்பல்ல உள்ளிருப்பு. உடன் வந்து பிழைத்திருத்தலாம் தலையில் குட்டு வைக்கலாம் தகுதியிருப்பின் வாழத்தலாம்

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP