என்னால் இயன்றது

நிச்சயமாக சொல்லமுடியும்
தொடரும் செல்(cell) லடி சப்தம்
தாளாது அழும் கைக்குழந்தைக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை
எந்த நாடும்
எந்த இயக்கமும்
முக்கியமாக
எந்த மொழியும்


எம் இறையாண்மையை
பாதுகாக்கும் பொருட்டு
என்னால் இயன்றது
இனி இந்த
உறக்கமற்ற இரவில்
பரத்தையின் முலையை
நகங்களால்
காயப்படுத்த மட்டுமே

இந்த சில மனிதர்கள்

முன்பின் கதவுகளை மூடியாயிற்று
யன்னல்களையும் சேர்த்து

உள்ஊடுறவும் வெளிச்சம் மறைக்க
இமைகளை இறுக்கிக்கொள்கிறேன்

என்னுடையதானது
உலகம்
சற்றே
பாதுகாப்பானதாகவும்

மெல்ல
மிக மெல்ல
சப்தமிடதொடங்குகிறது
மனதின் வெறுமை
வயிற்றை அடைந்து

இனி இந்த நாளை
இந்த மனிதர்களை
இவர்களுக்கான சில பல வார்தைகளை
மூடிய கதவைத்திறப்பது போல்
கவனத்துடன்
வெளியேற்றவேண்டும்

முன் மூடியிருந்ததற்கான அடையாளங்களை
யாருமறியுமுன் துடைத்தெரியவும்

தமிழ் சினிமா - சில கேள்விகள்

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்

எந்த வயதில் முதல் படம் என்று நினைவில்லை.
என் நினைவில் நிழலாடும் படம் 'புன்னகை மன்னன்'. அந்த அருவி ஓர் ஆழமான அதிர்வுகள் மனதில் அந்த சிறு வயதில் ஏற்படுத்தின.இன்று வரை அந்த அதிர்வுகள் நிற்கவில்லை அந்தப்படத்தையோ அருவியையோ நோக்குகையில்


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

சரோஜா. மிகவும் கவர்ந்த திரைப்படம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

மௌனராகம். வீட்டில். இன்னும் ப்லமுறை பார்ததாலும் சலிக்காது.

.4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

அவள் அப்படித்தான் மற்றும் முள்ளும் மலரும். இரண்டிலும் பார்த்து வியந்த ரஜி்னிக்காக இன்றும் ஏங்கிக்கொண்டிருக்கிறேன். மேலும் அந்த படங்களின் எதார்த்த மனிதர்க்ளை பிறகு வேறெந்த படத்திலும் என்னால் பார்க்கமுடியவில்லை. (கவனிக்க: உதி்ரி்பபூக்கள் நான் இன்னும் பார்க்கவில்லை)

.5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
தனிப்பட்டு எதுவும் சொல்லத்தெரியவில்லை.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
ஒரு கலையில் technical விஷ்யங்கள் வெளிப்படையாக இல்லாமலிருப்பதே சிறப்பு.

இருந்தும் சமீபத்தில்
சுப்ரமணியபுரம் (கலை மற்றும் ஒளிப்பதிவு)
பொல்லாதவன் (ஒளிப்பதிவு)
7/g ரயின்போ காலனி(ஒளிப்பதிவு) என்னை மிகவும் கவர்ந்த்வை.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

பெரும்பாலும் நம் விமர்சகர்கள் உணர்ச்சிவசப்பட்கூடியவர்களாக இருப்பதால் விமர்சனங்களை நம்புவது மிகவும் கடினம்


7.தமிழ்ச்சினிமா இசை

இளையராஜா வின் இசை தான் இன்றுவரை என்னோடு பயனித்துக்கொண்டிருக்கிறது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பிற மொழி இந்திய மொழிப்படம் :

1.MR and Mrs Iyer
2.The Terrorist

உலகப்படங்கள் :

Blow Up
Amile (French)


The Apple(Iranian)
White Baloon(Iranian)
Children of heaven (Iranian)
Color of paradise(iranian)
TEN (Iranian)
Life and Nothing Else (Iranian)
Colour of paradise(Iranian)
The Circle (Iranian)

NUOUO Cinema paradiso (Italian)
ThE sons Room(ITALIAN)
DONT TELL (ITALIAN)

In the mood for love (Hong kong)
Fallen Angels(Hong kong)

CENTRAL STATION (Brazil)
the way home(South Korean)

My Life as a DOG (SWEDISH)
The silence (SWEDISH) (Ingmar bergman)

LE Papillon( The Butterfly) (French)

RED BEARD(JAPANEESE)

THE SEA INSIDE(SPANISH)

THE Prestige(English)
Sex and Philosophy(English)

THE PARADISE NOW(Arabic)

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

மாமல்லன் கார்த்திக் : இயக்குனர்.3 சிறந்த குறும்படங்கள் இதுவரை இயக்கி உள்ளார்.அவற்றில் 'இடைவெளி' என்னை மிகவும் பாதித்த படம். மேலும் உலக புகழ் இலங்கை இயக்குனர் பிரசன்னா விதாநகே ('prasanna vithanage') உடன் அவருடைய புதிய படம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார்.

சந்தோஷ் நம்பிராஜன்:துனை ஒளிப்பதிவாளர்

இருவரும் தனிப்பட்டு அறிமுகமானவர்கள். இருவரும் நல்ல சினிமா மீதான நம்பிக்கையோடு இயங்குபவ்ர்கள்.
சினிமா குறித்து தெளிவான புரிதலும் சினிமாவிற்கு இலக்கியம் வாசிப்பு மிக முக்கி்யமானது என்று அறிவுறுத்துபவர்கள்

சினிமா என்ற கலை மீதான புரிதல் குறித்து அதிகம் விவாதிப்பதுன்டு. அதில் அவர்களைவிட எனக்கு அதிக பயன் கிட்டியது.


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மக்கள் மாற்றங்களை எதிர்பார்க்க தொடங்கியிருக்கிறார்கள்.எனவே எல்லாம் நல்லதாகவே இருக்கும் என்று ந்ம்புகிறேன்


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

மேல் சொன்னது சத்தியமாக சாததியமில்லை.
அப்படி நடக்குமாயின் கீ்ழ் சொல்வதும் நடக்கலாம்

மக்கள் அதிகம் இலக்கியம் படிக்க தொடங்கலாம்


இலக்குவண்

என்னை அழைத்தமைக்கு நன்றி சித்தார்த்
(http://angumingum.wordpress.com/2008/10/12/tamilcinema/)

கடவுளும் இன்னபிற.....

வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

காமம்

சில புள்ளிகளை
இணைத்து
அழகான கோலங்களாக்கி
இந்த
இரவின் விரல்
பிடித்து விடியலுக்கு
அழைத்து செல்

அன்பின் நிழல்

நிழல்களாலான
என் அறையின்
இருள்
உன் பயங்களுக்கும் கற்பனைகளுக்கும்
உணவாகிறது

முதலில் யன்னலை
பின்
கதவை திறந்து வைத்தேன்
உனக்கான
வெளிச்சம் தேடி
இப்பொழுது
அதன் சுவர்களை
இடித்துக்கொண்டிருக்கிறேன்

காதல்

மீண்டும்
நடுங்குகிறது தண்டவாளம்

மீண்டும்
இதயம் இரண்டாகும் சப்தம்
காதைக்கிழிக்கிறது

மீண்டும்
சில நிமிடங்களில்
நீளும்பார்வையில் கூசும்
வெறுமை

மீண்டும்
விரல்கள் மறைக்கும்
கண்ணீரம்

மீண்டும்
அமைதி

மீண்டும்
இன்னும் சில நிமிடங்களில்
நிச்சயமாய்
தெரியும்
தண்டவாளம் நடுங்கும்

இருத்தல்

அழுகிய பழத்தில்
உனக்கு அருவருப்பாய்
நெளியும் புழு உண்மையில்
நிகழ்துவது
எளிமையான ஒரு வாழ்க்கைக்கான
போராட்டத்தை மட்டுமே

மரநிழலில்

நீண்ட நாட்களுக்கு பின்
மெல்லுணர்வுகளை
அர்த்தப்படுத்தி
என் உடல் மேல்
ஓர் உயிர் ஊர்ந்துகொண்டிருக்கிறது


நீண்ட நாட்களுக்கு பின்
சற்றே
ஒரு மரநிழலில்
கண்ணுறங்கிகொண்டிருக்கிறேன்

அலுவலகம்

இயந்திரங்களுக்கு
ஒத்திசைந்து
புணர இயலவில்லை

உணர்ச்சிகள் அற்ற
உருவங்களை
ஓவியமென்றும்
மனிதரென்றும்
கூச்சலிடத்தெரியவில்லை

குளிரூட்டப்பட்ட அறையின்
எல்லா திசைகளிருந்தும்
என்நாசியில் மட்டும்
நுழைகிறது பிணவாடை

இது கவிதையல்ல

தனிமையை உணர்ந்து
பக்கமிருந்து
சிறு அசைவுகளோடு
மனதின் இரணங்களை மருந்திட்டு
தோள் சாய்ந்து
தன் இருப்பினால் என் வாழ்வை அர்த்தப்படுத்தி
ஈரமணல் அமர்ந்து
கடல் பார்த்து மௌனித்து
வார்த்தைகள் தொலையும் இடங்களில்
கைகளைப்பற்றி
எல்லாம் பகிர்ந்துவிட்டதாய்
சிறுபுன்னகையோடு
கடல்காற்று முகம் அறைய
விழிநீர் மறைத்து
அந்த நிமிடங்கள் வாழ்க்கை வாழப்படுவதாய்
உறக்க சப்தமிடும் மனதோடு
இசைந்துருகி உயிர்பிரியும்
இந்த நொடிகளில்

தனித்து கிடக்கிறது
வாழ்க்கையும் மரணமும்

நான் வாங்கும் சம்பளத்தை குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நீ உன் செவ்வாய் கிழமை பற்றிய வழமையோடு

நீயற்ற பொழுதுகளில்

உன் காதுமடலருகே
மௌனமாய் வாழ்வின் இரகசியம் பகிர்ந்து
விட்டு விலகி
உலகம் பார்த்து கைகொட்டி சிரிக்கும்
தருணங்கள் தேடி
திண்ணையில் தூண் சாய்ந்து
காத்திருக்கிறது
ஒரு குழந்தை.

கூடு

நடுங்கும் குளிரில்
உடைந்த முட்டையோடுகளின் மிச்சமும்
குருதி நாற்றமும்
சகிக்காது
தனித்த கூட்டின் எல்லை கடந்து
சற்றுமுன் பிறந்த சிறு பறவை எழுப்பும் சப்தம்
இந்த உலகத்தின் எல்லா இரைச்சல் கடந்து
என்னை மட்டும் நெருங்குகிறது
இல்லை இல்லை
என்னிலிருந்து தான் தொடங்குகிறது

கவனிப்பாரற்று

நடைபாதையில்
பகல் முழுதும்
கவனிப்பாரற்று
இறந்து கிடந்த உடலொன்று
இரவில்
தன்முகத்தை
அலம்பிக்கொண்டு
நிலவை பார்த்து புன்னகைக்கிறது
பல்இடுக்கில் கசியும் இரத்தம் சுவைத்தபடி

கனவின் நீட்சி

நெரிசல் மிகுந்த
சாலையில்
மெல்ல நகரும்
பேருந்தின் கம்பியில் சாய்ந்தபடி
தன்னைமீறி வழிந்து பெருகும் கண்ணீருக்கும்
சற்றுமுன் கைதவறி
விழுந்து உடைந்து துர்நாற்றம் பரப்பும் அந்த கனவிற்கும்
நம்புங்கள்
எந்த சம்பந்தமும் இல்லை

எழுத்து என்பது?

எழுத்து என்பது மிகவும் சக்தி வாய்ந்தது(எவ்வளவோ முறை யார் யாருடேய வாயிலோ எழுத்திலோ பட்டு தன்னை தன் சக்தியை இழந்த ஒரு சக்திவாய்ந்த வாக்கியம்).அந்த எழுத்தின் மூலம் நான் அவனை பற்றி உங்களுக்கு சொல்லப்போகிறேன்.அவன் யார்?அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவனைப்பற்றி நீங்கள் தெரிந்து என்ன ஆகப்போகிறது? ஏன் நான் உங்களை பற்றி எழுதக்கூடாது? நீங்கள் கேட்பது என் காதுகளை துளைக்கிறது.நீங்கள் கேட்பதாக நான் நினைப்பது.

உங்களை பற்றி எழுதலாம் தான்.உங்களை பற்றி எனக்கு என்ன தெரியும்?.ஒன்றும் தெரியாது.கற்பனை செய்யலாம்.உங்களை பற்றி கற்பனை செய்வது எனக்கொன்றும் அசௌகரியம் இல்லை.ஆனால் உண்மையோடு என் கற்பனையை சேர்ப்பது பாலில் நீரை அதிகம் சேர்ப்பது போல், உங்களின் கோடுகளுக்குள் நான் பயணிப்பதைப்போல,ஒரு வகையில் எளிதில் நீர்த்துவிடலாம்.பயனற்றும் போகலாம்.

Simlpy my Legs may not fit your shoes

உங்களுக்கு இப்பொழுது நான் ஆதவனையோ சு.ராவையோ பிரதிபலிப்பது போல தோன்றலாம்.அது உண்மைதான்.அவர்களின் எழுத்துக்கள் எனக்குள் எழுப்பும் சப்தங்களைத்தான் வரைகிறேன்.எழுத்தாக்குகிறேன்.ஆதி மனிதன் தன் மௌனத்தை இழந்து அல்லது உடைத்து தருணத்தில் சப்தத்தை உருவாக்கியது போல.பின் மொழியை உருவாக்கியதைப்போல.மிக இயற்கையாக.

அடுத்து நீங்கள் உங்கள் எழுத்தோடு என் எழுத்தை ஒப்பீடு செய்யலாம்.நான் தடுக்கவில்லை.அது தேவையற்றது.நான் எப்பொழுதுமே உங்கள் எழுத்துக்களால் பிரமிப்படைந்ததில்லை.தவறி நடந்தால், நான் உங்களை என் குருவாக ஏற்று விடுவேன்.ஆம் எந்த காரணம் கொண்டும் என் சகபயணியிடமிருந்து வெகுதூரத்தில் தான் நான் இருக்கிறேன்.அந்த தொலைவும் என் தனிமையும் எனக்கு வசதியானது.உங்களை ஆச்சர்யப்படவோ பயங்கொள்ளவோ செய்ய எளிதானது.நீங்கள் விமர்சிக்க அஞ்சலாம்.அப்படியே விமர்சித்திருந்தாலும் அது அந்த தொலைவைக்கடந்து என்னை சேரும் பொழுது தன் சக்தியை இழந்திருக்கும் இல்லை உருமாறி இருக்கும்.ஆயிரம் ஆண்டுகள் கடந்த கலாசாரம் இப்பொழுது நம்கையில் வெறும் அநுமானங்களாய் இருப்பது போல.(மரத்தில் கயிறு கட்டினால் கல்யாணம் ஆகும். குழந்தை கூட பிறக்கும்).வேற்றுமொழி சொற்களை தமிழ் எழுத்துகளால் எழுதுவதுபோல.தமிழ் சொல்லாகவே அது ஆகிவிட்டதைப்போல.எவ்வளவு தவறு அது.
ஒரு மொழியின் சொல்லை மற்றொரு மொழியின் சொல்லாக பிறருக்கு அறிமுகம் செய்வது.
இதை அறியாத அடுத்த தலைமுறை அந்த சொற்களை தமிழென பாவித்து இலக்கணத்திற்கு முரணாக இருப்பதால் குழம்புவது.நகர வாழ்கையில் பொங்கல் கொண்டாடுவதைப்போல(இந்த வருடம் கரும்பு ரொம்ப costly இல்ல).

எழுத்துமொழி அற்ற வடமொழிக்கான நியாயங்கள் இல்லாத பொழுதும் ஆங்கிலம்,hindi இன்னபிற மொழியின் வார்த்தைகள் தமிழாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளபட்டுவிட்டன (உங்களை தொடர்ந்து நானும் எழுத்துலகத்திற்குள் வருவதைப்போல என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம்).அவ்வாறு எழுதுபவர்கள் தன்னை வாசிப்பவர்கள் வேற்று மொழியின் வார்த்தைகள் அறிந்தால் போதும் மொழி அறிய அவசியமில்லை (பல மொழிகள் இருக்கும் இந்த நாட்டில்) என்பதை ஒரு வசதியாகவும் பின் வழக்கமாக ஆக்கிவிட்டார்கள்.

இதை பற்றி எனக்கென்ன கவலை.என்னைப்படிப்பவர்கள் நான் எழுதும் மொழிகளை தெரிந்து வரட்டுமே.வருவார்கள்.அவ்வளவு நம்பிக்கையா எனக்கு?.தெரிந்து வருவார்கள் என்று நான் அநுமானிக்கிறேன்.

ஆம்.கதையோ கவிதையோ கட்டுரையோ எழுதுவதற்கு இவ்வளவு அநுமானம் தேவைப்படுகிறது.அதுவும் மொழி அளவில்.கருத்தளவில் இன்னும் பல இருக்கின்றன.
அன்னையென்றால் பாசம்.தந்தையென்றால் கண்டிப்பு.பெண் என்றால் கற்புக்கரசி.புரட்சி செய்ய நினைத்து இந்த அநுமானங்களை உடைக்கலாம்.இதையும் கூட அநுமானிக்க வேண்டும்.எந்த வார்த்தையைக்கொண்டு பழைய அநுமானங்களை உடைப்பது என்று.எந்த வார்த்தை எந்த எழுத்துக்களின் தொகுப்பு வாசகனை அவன் அநுமானங்கள் உடைவதை அதிர்ச்சியோடு நோக்கச்செய்யும் என்பது குறித்து.

இவ்வளவு யோசித்து பின் எதை எழுதுவது. யோசித்ததையா?. அது வார்த்தைகளின் இருண்ட கூடாரம் போல.இந்த வார்த்தைக்கு இத்தனை எழுத்து என்பதைப்போல.காதல் தோல்விக்கு தாடி வளர்ப்பதைப்போல.ஓரு வழமை.ஒரு கட்டாயம்.

Artist should follow his instinct and not the rules.

நான் எழுத நினைத்ததை நினைப்பதை எழுத முயல்கிறேன்.அந்த நொடியின் உண்மையென நினைப்பதை. ஆழந்து யோசித்து கலைக்குள் அறிவியலை வேதியல் தொடங்கி எல்லா இயல்களையும் புகுத்தாமல்.மனிதனை மனிதனாக.மற்றுமொரு விலங்காக எழுத முயல்கிறேன்(விலங்கு என்பது குரூரமான என்பதற்று உண்மையான என்பதாக).

அதனால் தான் நான் உங்களை பற்றி அல்லாது அவனைப்பற்ற என்னைப்பற்றி எழுதுயிருக்கிறேன்.(ஆம் அவன் என்று சொன்னது என்னைப்பற்றிதான் என்பதை நீங்கள் முன்பே அநுமானித்திருந்தால் மகிழ்ச்சி)


"எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்கி
ன்



அவைகளைத்
துடைத்தெரிய வேண்டும்
வேண்டும்"

--நகுலன்

காமம்

உடல்
காட்டிற்குள்
வழி அறியாது்
திரிகிறேன்
உன் வாசம் தேடி
ஒரு விலங்காய்

மீண்டும் உன்னை நெருங்குகிறேன்

குழந்தையின்
மெல்லிய விரல்கள்
விளையாட்டின் அழகியலோடு
குரூரமாய் என்
பூக்களை பிய்த்தெறிந்தன

சாலையில் விழுந்த
அதன் இதழ்கள் மேல்
நடிகனைப்போல புன்னகைத்து நடக்கையில்
மென்மையும அருவருப்பும்
ஒருசேர
பாதங்கள் உணர்ந்தன

இறந்த பெண்ணின்
உடலைப் புணரும் இச்சையோடு
பேச தொடங்கினேன்
உன்னிடம்
நலமா

தனித்திருத்தல்

மிக அருகாமையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
உலர்ந்து கொண்டிருக்கிறது
அந்த உயிர்


இறுகிய இமைகளை
அதிர்ந்து திறக்கின்றேன்
பார்வையை மறைக்கிறது
கனவுகளின் கறை

சிங்கத்தின் குகையில்
மொழியிழந்த
வவ்வால் ஒன்று
தனித்து தொங்கிக்கொண்டிருக்கிறது
இன்றும்

உண்மைக்காதல்

சில மதிப்பீடுகளோடு
உண்மைக்காதலைத்
தேடிக்
கொண்டிருக்கிறார்கள்

அவர்களுக்கு
தெரியாமல் பார்த்துக்கொள்

எனக்கு
உன் முலை
பிடிக்கும் என்பதை

உனக்கு
என் உடல் வாசம்
பிடிக்கும் என்பதையும்

ஆம்
அவர்கள்
நம் காதலைக்கற்பழிக்கக்கூடும

இப்பொழுதெல்லாம்

இப்பொழுதெல்லாம்
விடியல்
என் வாயிலுக்கு
பிச்சைப்பாத்திரத்தோடு
அந்தக்குழந்தையை
அனுப்பிவைக்கிறது
ஏக்கம் தோய்ந்த பார்வையோடும்

பழங்களையும்
சில கிழமைகளில் என் மதுவையும்
பகிர்ந்தளித்தேன்

இன்று
இவையெதிலும்
அந்தப்பாத்திரம்
நிறம்பவில்லை

ஏக்கம் தோய்ந்த
அந்த முகத்தை
எதிர்கொள்ளவியலாது தகிக்கிறேன்

என் விரல்களால்
மெதுவாய்
நஞ்சின் ஒரு துளியை
கலந்தளிக்கிறேன்

மதுவின் மாறிய வண்ணத்தில்
முகம் மலர்ந்த குழந்தை
மதுவருந்தி விலகியது

நாளைய விடியலில்
மீண்டும் வரலாம்

அந்தப்பாத்திரம்
அந்தப்பார்வை
இரத்தம் வழிந்த அதன் உதடுகள்

இப்பொழுதெல்லாம்
இரவை விட
விடியலை எதிர்கொள்வது
கடினமாய் இருக்கிறது

தனித்த இரவுகள்

பாம்புகள் இரண்டு
என் போர்வையின்
மேல்
புணர்ந்து கொண்டிருக்கிறது

பயம் கொண்ட
உயிர்
மெல்லக்கசிந்து வெளியேறி
அறையின்
மூலையில் மௌனமாய்
தனித்து அமர்ந்திருக்கிறது

கனவின்
நிர்வாணப்பெண்
என் உடலை
பிணமென
உமிழ்ந்து
தனைக்கலைத்து மறைகிறாள்

இன்னும்
அந்த பாம்புகள்
புணர்ந்துகொண்டுதான் இருக்கிறது
என் போர்வையின்
மேல்

விடியலின்
திசை
ஒட்டடைகளுள்
எங்கோ
அடைந்து கிடக்கிறது

மௌனங்கள்

மௌனங்களால்
அறுந்து கிடக்கும்
உயிரில்
கசியும் குருதியை
ஈக்கள் மொய்க்கின்றன
இரவு நேரங்களில்
நாய்களும்

இந்தப்பொழுதின்
மென் காற்றில்
வண்ணங்கள் தூவி
மிதந்துகொண்டிருக்கிறது
ஒரு நீர்க்குமிழி
எந்த நொடியும்
உடையக்கூடிய சாத்தியங்களோடு

ஒரு புன்னகை

உடன் பகிர்ந்து விட
இயலாத ஒரு புன்னகை
சிதறி கிடக்கிறது
பூக்களாய்
பிணம் சென்ற
வழியெல்லாம்

வெறும்
அடையாளமாகவும்
தனித்தும்
நிராகரிப்பின் வலியோடும்

எந்த பிரக்ஞையுமற்று
மெல்ல
மேற்கு நோக்கி
நகர்கிறது சூரியன்

என் அறையில்





அந்த அறையில்
எறும்பும் புழுவும்
சற்றுமுன் துளிர்த்த ஒரு பூச்செடியும்
கொலையுறும் சப்தம்
எப்பொழுதும்
கேட்டுக்கொண்டிருக்கும்

இரக்கமற்ற பதில்கள்
குரூர விழி திறந்து
இரவுகளில்
உள் உலாவும்
பசியோடும் பல்குத்தும் மரக்கிளையோடும்

வன்புணர்வின் அடையாளங்களோடு
அறை நடுவில்
கிடத்தப்பட்டிருக்கும்
ஓர் குழந்தையின் உடல்

அதிர்வுகளற்ற மெல்லிய
அதன் சுவாசத்தில்
நிரம்பி வழியும்
என்றாவது கேட்கும்
ஒரு தாலாட்டின் நம்பிக்கை

இயல்பாகவே இருக்கிறது
அவ்வப்பொழுது
பிணமென வெளியேறவும்
உயிர்ப்புடன் இருக்க
ஊர்க்கதை மட்டும்
பேசிச் சிரித்துக்கொள்ளவும்

ஆண்டவன் கனவு

இரவின் இருளுக்கு பயந்து
கைக்கும் எட்டாத தூரத்தில் ஒளிந்துகொள்கிறது
உறக்கம் நடுக்கத்தோடு
அழைத்தும் வெளி வர மறுத்து

தனிமையின் வெம்மை தாளாது
உலர்ந்து கிடக்கும் நொடிகளை
சுமந்து செல்ல விருப்பமின்றி
கடிகார முள்
மெதுவாய் நகர்கிறது

எல்லாமும் சரியாக இருப்பதான
நினைப்போடு எந்த வித அடிப்படை தொடர்புகளற்ற
நானும் நானின்மையும் இன்னும் சில
எதார்த்தங்களையும் ஒன்று சேர்த்து
கனவொன்றை காணும்
இறைவனுடைய நிகழ்காலத்தின் வலியுணர்ந்து
வருத்தம் கொள்கிறேன்!

பகிர்வுந்தில் (share Auto) என் தொடை உரசி அமர்ந்திருக்கும்
அந்த ஆன்மாவுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை
நான் ஆண் அது பெண் என்பதை தவிற!

சந்திப்பு

பயபக்தியுடன்
கோவிலின் கருவறை
உள் நுழைந்தேன்


நேற்றிரவுப்பார்த்த
பிசாசைப்பற்றி
கடவுள் முன்
கூறிக்கொண்டிருந்தேன்
வெளிறிய முகத்துடன்

தானும் தான்
என்ற கடவுளின்
முகமும் வெளிறி இருந்தது

கோணங்கள்

அவளைப்
பார்த்துக்
கொண்டிருந்தேன்

அவள்
என் பார்வையைக்
கவனித்து
தன் ஆடைகளை
சரி செய்துகொண்டாள்

உண்மையில்
அவளுக்கு தெரியவில்லை
நான்
அவளைப்
பார்த்துக் கொண்டிருப்பது!

வெளிச்சம்

பிரபஞ்சத்தின் இருள்
துகள்களுக்குள்
நான் கரைய மிச்சமாய்
உயிர்த்துக் கிடந்த விரல்கள் தீண்டின
ஒரு் தாவணிப்பெண்ணின்
இடையையும்
பறக்கத் துடித்த
ஒரு பட்டாம் பூச்சியின் சிறகையும்

மீண்ட வெளிச்சத்தின்
அசௌகரியத்தில்
அவைகள்
உயிரிழந்து உருமாறின
யாரோ விட்டுச்சென்ற
கைக்குட்டையாகவும்
என்னுடைய பழைய கவிதையாகவும்

கைகால் முளைத்து
நானும் ஆறடி
மனிதனாக
நாகரீகம் கருதி
ஆடைகள் தேடிக்கொண்டிருந்தேன்
அப்பொழுது

காதல்

நீந்த தெரியாமல்
கிணற்றை
ரசிப்பது தவறென்று
ஒவ்வொரு முறை கால் தவறி
உள்விழும் பொழுதும்
நினைத்துக் கொள்கிறேன்

தாலாட்டு

உன் புன்னகையொத்து
ஒர் தாலாட்டை
மென்மையாய்
உதிர்க்கின்றாய்

வார்த்தைகள் தெளிவில்லை
அர்த்தமும் விளங்கவில்லை தான்

என்றாலும்
கண்டிப்பாக தெரியும்
அது ஒரு தாலாட்டு என்று

அசையத்தொடங்கியது
ஓர் ஆதியின்
தூளி

உறக்கம் கலையாத
ஓர் குழந்தையின்
புன்னகையும் சாட்சியாய்

நேற்று
இன்று
நாளை
எல்லாம் கனமிழக்க
துயில் கொள்ளத்
துவங்குகிறேன்
அமைதியாய்
ஓர் கருவறையின்
கதகதப்போடு

சொல்

நரம்புகள் இறுகிய
உடலுள்
உயிர்க் குடித்து
மெல்லத் துயில்கொள்ள
இடம் தேடும்
ஓர் அரவம்

பக்கத்தில் இருந்தவளின்
முகம் முலை அக்கறையற்று
பேருந்தின் யன்னலில்
தலைசாய்ந்து வெறிக்கிறேன்
தவமென நீள்கிறது சாலை

பார்வை மறைத்து
இமைகளின் இடுக்கில்
புழுக்கள் நெளிகின்றன
இரவின் நீட்சியாய்

மீண்டும்
உன் உதட்டின் ஈரம் தேடி
அழுகிய
அந்த சொல்லை
நெருங்குகிறது
விரல்கள்

பழகிய நிறுத்தத்தில்
இறங்க
யாரும் சொல்ல
வேண்டியதில்லை

பாலையின் சுவடுகள் என் மனதில்

அன்புள்ள தேவதைக்கு,

உன் பிரிவின் வலியை கூற விழைந்து எங்கேனும் உன்னை கொலை செய்யும் முயற்சி ஆகிடுமோ என்ற பயத்தோடு இப்படி மௌனம் காக்கிறேன்..

உன்னை பற்றி மட்டுமே நினைத்து கொண்டிருப்பதில்லை. இருந்தும் என்னொடு ஏதோ ஒரு வழியில் உன் பிரிவு வந்துகொண்டுதான் இருக்கிறது.

சற்றே கண்ணுறும் பொழுது ஒரு மௌனமான வலி ஒன்று வெயில் நுழையும் இருள் போல உயிர் நுழைந்து கிழிக்கிறது என் இருப்பை.

கழுத்தில், கன்னத்தில் ,இதயத்தின் ஓரத்தில் ,கால்களில், இறுகும் நெற்றியில் எல்லாமும் நிகழ்கிறது ஒரு வலியின் கண்ணீருக்குறிய தேடல்.

உன் இறுதி வார்த்தைகளும் இந்த நீண்ட மௌனமும் மனதில் எதிரொலியென மீண்டும் மீண்டும் வருகிறது. அதிர்வுகள் நிற்காமல்.

வாழ்கை உனக்கும் எனக்கும் அனைத்தையும் கற்று தந்துகொண்டே இருக்கிறது.அதனால் என் விளக்கம் எதுவும் உனக்கும் உன் விளக்கம் எனக்கும் தேவையில்லை என்று இருவருக்கும் தெரியும்.
இருப்பினும் பல நேரங்களில் எனக்கும் சில நேரங்களில் உனக்கும் ஒரு ஆறுதல் தேவைபடுவது நம் உறவின் இருப்பும் அதன் தேவையுமாய் உணர்கிறேன்.

'நாம் ஆண்டவனின், அவன் வழியில், மிகவும் நேசிக்கபடும் குழந்தைகள்..நாமும் அவனை நேசித்துகொண்டே இருப்போம் நம் வழியில்'

வார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும் அனுபவம்தானே தீர்மானிக்கின்றன. நிறைய எழுதவேண்டும்..அதிகம் பேசவேண்டும்..

அந்த பார்வை.சிறு புன்னகை.இறுதியாக எப்பொழுது..தெரியவில்லை...ஏதோ ஒரு விபத்தில்... இனி எப்பொழுது...விபத்தோ..வினையோ..விதியோ...

ஒன்றுமட்டும் நிச்சயம். இந்த மடல் முழுதும் உனக்கு தெரியாத எதையும் பதிவு செய்யவில்லை என்றே தோன்றுகிறதே எப்பொழுதும் போல்.

குழலோசை

உணர்ச்சிகள் உள்மறைக்கும்
மரங்கள் சூழந்த
காட்டினிடை
உயிரறும் ஓசையெழுப்பி
உருண்டுக்கொண்டிருக்கும
ஓர் மூங்கிலின் எச்சம்
மொழிப்பெயர்க்கிறது
யாருமற்ற நதிக்கரையில்
நிலையென நிற்க
முயற்சித்து நிதம் தோற்று தள்ளாடும்
ஓர் ஓடத்தின் தடுமாற்றத்தை!

தடுத்திருக்க இயலாதுதான்
இருந்தும்
ஒருமுறையேனும்
ஓடமென உருக்கொள்ளும் முன்
சிந்தித்திருக்கலாம்
குறைந்தபட்சம்
விருப்பமற்ற இயல்பான வலிகளை
எதார்த்தமென
ஏற்று மௌனித்திருக்கவும்
அந்தியின் தனித்த குழலோசையொத்த
கழிவிரக்கங்களை தவிற்கவும்

வேண்டுதல்களின் பயன்

மௌனமாய்
கண்கள் மூடுகின்றேன்
உயர்கின்றன ஏக்கத்துடன் ஆயிரம் கரங்கள்
மெல்லிய அசைவுகளுடன் உதடுகள்
திசையெங்கும் வேண்டுதல்களின் சப்தம்

எதிரொலியால் அமைதியிழந்து
விழித் திறக்கின்றேன்
தனிமையைத் தவிர
அங்கு ஏதுமில்லை
கோயிலும் கடவுளும் கூட

கையறுநிலையின் சாட்சியென
வெளியேறிய
விழிநீர்த்துளி
ஒன்றில் மிதக்கின்றன
அந்த ஆயிரம் கரங்கள்

உள்பரவுகிறது ஓர் அமைதி
பிரகாரத்தின் வெயில் போல
மெதுவாய்

இனி
நாட்குறிப்பை மூடிவைத்து
உறங்கலாம

வாழ்க்கை

நேரம் காலம்
கண்ணியம்
ஏதும் பாராமல்
தன் கழிவை
தோளில் இட்டு
செல்லும்
காகம்!

குணம்

நாயிலிருந்து
பன்றியாக
வால் வளைந்ததை
எண்ணி வருத்தம் கொண்டாலும்
காளையாகி நீண்டதும் மகிழ்ந்தது
பின் குதிரையாகி
யானையாகி
இன்ன பிற விலங்கினமென
தான் மாறி கொண்டிருக்கும்
பொழுதின்
ஓர் ஓய்வுநாளில்
ஆதியில்
வாலில்லாமல்
எப்படி வாழ்ந்தோம்
எண்ணி
ஆச்சரியப்பட்ட
அது ‘அது’வல்ல

பருவங்கள்

கசக்கியெறியப்பட்ட
அந்த தேதியை
மெதுவாய்
பிரித்து பார்க்கிறது
பிஞ்சு விரல்கள்

உள்ளிருக்கும்
நிகழ்வுகளின் குரூரங்கள்
நினைவில் வர
பயந்துப்
பதறி தடுக்க முனைந்தேன்

சிறு கோடுகள்
சில எண்கள்
ஒரு மகிழ்ச்சி
குழந்தையின் கண்களில்
வேறெதுவும் புலப்படவில்லை

வாழ்வியல் எதார்த்தமென
கடந்த காலத்தில்
மற்றொரு துர்நாளில்
அந்த குழந்தை
கசக்கி எறியப்பட்டது
இந்தத் தேதியைப்போல
என்னிலிருந்து

நகுலனை-என் நண்பனை-மொழிப்பெயர்த்தல்

இந்தத் தலைப்பைப் பார்த்து என்னைப்பற்றிய உன் பிம்மங்களை நீ உயர்த்திக்கொள்ளலாம் இல்லை மிகவும் தாழத்திக்கொள்ளலாம் அல்லது இருக்கும் எல்லா பிம்மங்களை உடைத்து புதிதாய் ஒன்றையும் உருவாக்கலாம்.அது உன்னைப்பொறுத்தது.அதில் எனக்கு அக்கறை இருந்தாலும் கவலையில்லை
'என்னைத் துரத்திக்கொண்டு
நான் செல்கிறேன்
எல்லோரும் சிரிக்கிறார்கள்'என்ற என் நண்பனின் (நகுலனின்) வாக்கை வாழ்த்தென நினைத்துக்கொண்டு என்னைத்தொடர்கிறேன். சிரிப்பதோ சிந்திப்பதோ எப்பொழுதும் பின்விளைவுகள் வாழ்வின் மிக சிக்கலான இரகசியம்.

நான் நகுலனை அவனுக்கான இரங்கல் கடிதங்களில் தான் முதலில் சந்தித்தேன்.அது மிகப்பெரிய மகிழச்சியையும் வருத்ததையும் ஒரு சேரத்தந்து இறந்த வீட்டில் எல்லா உறவுகளையும் எதிர் பாராமல் சந்தித்த சிறு பிள்ளையைப் போல் விழி பிதுங்கி நிற்கச்செய்தது.பின் என் இலக்கிய நண்பியின் வார்த்தைகளில் அவனை சற்றே முழுமையாக உருக்கொண்டேன்.அதாவது 'நகுலனின்
கவிதைகள் ஒரு வடிகால்' என்ற அவள் வார்த்தை அவனை என்னுள் உணரச்செய்தது.
நேற்று அவனுடைய 'நகுலனின் கவிதைகள்' (காவ்யா பதப்பகம்)" அவனை எனக்கு நண்பனாக்கியது. இனி அவனை அவன் கவிதைகளை என் வாழ்வியல் வழி மொழிப்பெயர்க்க முயற்சிக்கிறேன்.

மனம் இருப்பின் உடன் வா.உன்னை அழைத்துக்கொண்டு செல்லும் என் விருப்பம் பின்குறிப்பல்ல உள்ளிருப்பு. உடன் வந்து பிழைத்திருத்தலாம் தலையில் குட்டு வைக்கலாம் தகுதியிருப்பின் வாழத்தலாம்

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP