மனோநிலை - 4
திருவினை - யாத்ரா
திருவினையாகாத முயற்சிகளை நொந்து
கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன்
கடைசியாக
அதற்கு முன்பாக
மலங்கழித்து விடலாமென
கழிவறை போக
பீங்கானில் தேரைகளிருக்க
கழிக்காது திரும்பி
வரும் வழியில்
எறும்புகளின் ஊர்வலத்திற்கு
இடையூறின்றி கவனமாக
கடந்து வந்தேன் அறைக்குள்
கரிசனங்கள் பிறந்து விடுகிற
கடைசி தருணங்களின்
வினோதத்தில் புன்சிரித்தேன்
என்றுமில்லாமல் அதிகமாய் வியர்க்க
பொத்தானையழுத்தப் போகையில்
சிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை
பார்வையில் இடறியது
40000 உயிர்கள் மாண்டுபோன
செய்தி தாங்கிய
தினசரி அருகிருந்தது
விசிறயேதேனும் அகப்படுமாவெனத் தேடுகையில்
சாம்பல் கிண்ணத்தில்
பிணங்களென்றிருக்கும்
துண்டுக் குவியல்களைக் கண்டு
கடைசி சிகரெட் பிடிக்கும்
ஆசையையும் கைவிட வேண்டியதாயிற்று
சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு
காத்திருக்கும் கயிற்றிற்க்கிரையாக
கதவைச் சாற்ற
கதவிடுக்கில் நசுங்கியிரண்டான
பல்லியின் வாயிலிருந்து
தப்பிப் பறந்ததொரு பூச்சி
கவிதை தனிப்பட்ட முறையில் கருத்தியல் ரீதியாக என்னை மிகவும் பாதித்தது.
அதையும் தாண்டி
//சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு//
ஆத்மநாம் - நகுலன் இவுங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் னு சொன்னா அது சாதாரணம்.
அவுங்களுக்கும் எனக்குமான நெருக்கத்திற்கு வார்த்தைகளே இல்லை ன்னு நினைச்சேன்.
தூக்குல தொங்க போகும் போது முத்தமிடுவது ங்கிறது இருக்கே.அது அதை உணர்த்துது.
ரசிகன்னு சொல்ல முடியாது.
பிடிக்கும் னு சொல்லமுடியாது
காதலன் ன்னும் சொல்ல முடியாது
வெவ்வேறு காலத்தில் இருந்த ஒருத்தனோட ஆத்மார்த்தமான உறவு.
உடலுக்கும் உணர்வுக்குமான நெருக்கம்.
ஒரு வேளை இதுதான் பக்தி இலக்கியத்துக்கெல்லாம் அடிப்படையோ என்னவோ.
நான் உன்னை பார்த்ததில்லை.
தீண்டினதில்லை.
நீ நான் நினைச்ச மாதிரி இருக்கியான்னு இருந்தி்ருப்பியான்னு கூடத் தெரியாது.
உன்னை பற்றிய சில வார்த்தைகள்.அது வழியா உன்னை முதல்ல அணுகுகிறேன்.பிறகு நீ எனக்கு நெருக்கமா அறிமுகமாகிற தருணம்.அதாவது நான் என் உணர்வுகளால உன் உணர்வுகள் (வார்த்தைகள்) வழியா உன்னை நெருங்கும் தருணம். இந்த பிரபஞ்சத்தில் இந்த வெளியில் கறைந்து இருக்கும் உன்னை என் பார்வை கண்டடையும் தருணம்
என்ன சொல்லியும் மனசு நிறையல.
மனதை மொழிபெயர்க்க இன்னும் பழகவேணும்.இன்னும் பயணிக்கனும் மொழியில்.
2 :பின்னூட்டங்கள்:
உங்க கூட பேசியதில் மிகவும் மகிழ்ச்சி, இங்கே என்ன எழுதுவதென்றே தெரியவில்லை நண்பா, மிக்க நன்றி.
யாத்ராவின் கவிதைகளில் இது உச்சம். உங்கள் உணர்வான இப்பதிவு நல்ல பதிவு
Post a Comment