என் அறையில்





அந்த அறையில்
எறும்பும் புழுவும்
சற்றுமுன் துளிர்த்த ஒரு பூச்செடியும்
கொலையுறும் சப்தம்
எப்பொழுதும்
கேட்டுக்கொண்டிருக்கும்

இரக்கமற்ற பதில்கள்
குரூர விழி திறந்து
இரவுகளில்
உள் உலாவும்
பசியோடும் பல்குத்தும் மரக்கிளையோடும்

வன்புணர்வின் அடையாளங்களோடு
அறை நடுவில்
கிடத்தப்பட்டிருக்கும்
ஓர் குழந்தையின் உடல்

அதிர்வுகளற்ற மெல்லிய
அதன் சுவாசத்தில்
நிரம்பி வழியும்
என்றாவது கேட்கும்
ஒரு தாலாட்டின் நம்பிக்கை

இயல்பாகவே இருக்கிறது
அவ்வப்பொழுது
பிணமென வெளியேறவும்
உயிர்ப்புடன் இருக்க
ஊர்க்கதை மட்டும்
பேசிச் சிரித்துக்கொள்ளவும்

3 comments:

  1. என்ன செய்வது குரூரங்களைக் கண்டும் அதையும் வாழ்வின் ஒரு பகுதியெனக் கண்மூடிக் கடந்துசெல்லவே விதிக்கப்பட்டிருக்கிறது. இப்படிக் கண்மூடிக் கடந்து கடந்து ஒருநாள் குருடாகிப் போய்விடுவோமோ என்று அச்சமாகவும் இருக்கிறது. தங்கள் எழுத்து மெருகேறி வருவதாக எனக்குத் தோன்றுகிறது. நிறைய வாசிக்கிறீர்களா? வாசிப்பு எனும் சுடர் விழுத்தும் வெளிச்சம் எழுத்தில் தெரியும்.

    ReplyDelete