நவீன ஓவியங்கள் பார்வைக்கு மட்டுமே

வீட்டை சுத்தம் செய்தபொழுது
ஒரு நவீன ஓவியம் கண்டெடுத்தேன்!
பல வண்ணங்களினாலானது!

சில வண்ணங்கள் மிகவும் அடர்த்தியாய்
சில மிக அழகாய்
சிலவைகள் தூசி படிந்து
ஒவ்வொறு வண்ணமும்
என்னை எனக்கு காட்டிக்கொண்டு கண்ணாடியைப்போல !

என் கண்கள் எல்லாவற்றையுமே நோக்குகிறது
ஒரு கடவுளை பார்ப்பது போல தன்னை மூடிக்கொண்டு!
அதை அந்த வண்ணங்கள் அறிந்திருக்கவில்லை!

ஓவியத்தின் இடையில் சில கோடுகளால்
பார்வை தடுமாறியது!
எல்லைகளைப்போல!பண்பாட்டைப் போல.
யாரோ எதற்கோ உருவாக்கியது அந்த கோடுகள்!
அந்த யாரோ நானகவும் இருக்கலாம்!
சில வண்ணங்கள் உடல் ஊடுருவும்
கத்தியைப்போல பிற வண்ணங்களுக்குள்
தம்மை நீட்டிக்கொள்கிறது எல்லைக்கோடுகள் கடந்தும்!


இப்படி சில வீடுகளும் சில ஓவியங்களும்
நானும் இருக்கும் ஒரு பாதையை
வழிச்சுமையாய் கொண்டு தொடர்கிறேன் வேறொருபாதையில்!

கைதவறி கீழ்வைத்துவிட
சுமந்து வந்த பாதை
ஒரு வேகத்தடையாய் சுருங்கி
வழிவிட மறுக்கிறது இப்பொழுது!

அறிவாளியாய்
வேகத்தை குறைத்து
தாண்டிச்செல்ல மனம் ஏனோ தான் மறுக்கிறது!

கவனம் ஈர்த்தல்

பின்இருக்கையில் அமர்ந்திருந்தவன்
ஏதேதோ பாடல்களை வசனமாக பாடிக்கொண்டிந்தான்!
தமிழ் படித்ததாக அவ்வப்பொழுது சப்தமிட்டுக்கொண்டும்.சிரித்துக்கொண்டும்!

உடன் பயணித்தவர்கள்
அவன் பைத்தியம் என்று உணர்ந்திருக்கவேண்டும்.
அப்படித்தான் இருந்தது அவர்களின் பேச்சு அவனைப்பற்றி.

நான் எல்லொரையும் கவனித்துகொண்டிருந்தேன்.
நல்ல வேலை என்னை யாரும் கவனிக்கவில்லை.விமர்சிக்கவுமில்லை.

மௌனமாக இருப்பது ஒரு வகையில் நல்லதுதான்!
கவனிக்கப்படாமல் இருப்பதும்!

எல்லாம் போல அதுவும்
அப்படியே இருக்கட்டும்...
இருக்கும் நிலையில்!
தவறோ சரியோ
நான் அதை தவறாக
நினைக்காதவரை!
உங்கள் நினைப்பை பற்றிய
என் நினைப்பும் அது போலவே..

இரவு-நான்-பகல்

வன்மம் நிறைந்த
ஓர் மிருகத்தின் பதுங்கலென மெதுவாய்
என் இன்றைய பகலின்
உள் நுழைகிறது நேற்றைய இரவு!

தன் அசிங்கங்களை ஆடைக்குள் மறைத்து
அழகிய முகத்தோடு ஏக்கம் நிறம்ப
எனை பார்த்தது!

தன் நேரங்களை
நான் பகலுக்கு விற்றுவிட்டேனென்று
குற்றம் சாட்டுகிறது!

உண்மைதானென்று
உளம் சொல்ல விரல் நீட்டி
வாவென்றேன்!

எனக்கு பின்னிருந்த
பகல் உறுமியது இது
தன் குகை என்று!

இது இன்று மட்டுமல்ல்!
தினசரி வழக்கமாகிவிட்டது
இப்பொழுது!

இவை இரண்டுக்கும் இடையில்
எப்பொழுதும் நான்!

என் வாழ்கையை பலிபீடமாக்கி
அதன் முன் மண்டியிடுகிறேன்!

முதலில் வாளெடுத்து வெட்டுபவற்கு பீடம் பரிசு
என் உயிர் இலவச இணைப்பு!

வெட்டப்பட்ட என் உடலை
ஒட்டி வைத்து
உயிர் கொடுத்து மீண்டும்
தொடரலாம் இந்த விளையாட்டை
நாளையும் நேற்றை போல!

தவறு யாருடையது

இன்னது என் பெயர்
கோயிலில் சந்தித்தோம்
உயரம் அதிகம்
வெண்ணிற உடை
சிறிய கண்கள்
சென்னைத்தமிழ்
இன்னும் சில…
"ஓ!நீங்களா!நலம்தானே!!"
அலைபேசியின் மறுமுனையிலிருந்து
நீண்ட மௌனத்திற்கு பின்
வழிந்த புதிய அன்பில்
அசௌகரியமுணர்ந்தது என் சுயம்!!

அறிந்து பின் மறந்த நண்பனாய்
மெல்லிய புன்னகையுடன
கேள்வி எழுப்பும் காலத்திற்கு
உண்மையான
என் அடையாளங்கள் நன்றாக தெரியும்!

நான் தான் என்னை தவறாக
அறிமுகபடுத்திவிட்டேன் போலும்!

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP