இப்பொழுதெல்லாம்

இப்பொழுதெல்லாம்
விடியல்
என் வாயிலுக்கு
பிச்சைப்பாத்திரத்தோடு
அந்தக்குழந்தையை
அனுப்பிவைக்கிறது
ஏக்கம் தோய்ந்த பார்வையோடும்

பழங்களையும்
சில கிழமைகளில் என் மதுவையும்
பகிர்ந்தளித்தேன்

இன்று
இவையெதிலும்
அந்தப்பாத்திரம்
நிறம்பவில்லை

ஏக்கம் தோய்ந்த
அந்த முகத்தை
எதிர்கொள்ளவியலாது தகிக்கிறேன்

என் விரல்களால்
மெதுவாய்
நஞ்சின் ஒரு துளியை
கலந்தளிக்கிறேன்

மதுவின் மாறிய வண்ணத்தில்
முகம் மலர்ந்த குழந்தை
மதுவருந்தி விலகியது

நாளைய விடியலில்
மீண்டும் வரலாம்

அந்தப்பாத்திரம்
அந்தப்பார்வை
இரத்தம் வழிந்த அதன் உதடுகள்

இப்பொழுதெல்லாம்
இரவை விட
விடியலை எதிர்கொள்வது
கடினமாய் இருக்கிறது

Read more...

தனித்த இரவுகள்

பாம்புகள் இரண்டு
என் போர்வையின்
மேல்
புணர்ந்து கொண்டிருக்கிறது

பயம் கொண்ட
உயிர்
மெல்லக்கசிந்து வெளியேறி
அறையின்
மூலையில் மௌனமாய்
தனித்து அமர்ந்திருக்கிறது

கனவின்
நிர்வாணப்பெண்
என் உடலை
பிணமென
உமிழ்ந்து
தனைக்கலைத்து மறைகிறாள்

இன்னும்
அந்த பாம்புகள்
புணர்ந்துகொண்டுதான் இருக்கிறது
என் போர்வையின்
மேல்

விடியலின்
திசை
ஒட்டடைகளுள்
எங்கோ
அடைந்து கிடக்கிறது

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP